தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு புயல் உருவாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதனால் மீண்டும் தமிழ்நாட்டில் மழை பெய்யும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
வங்கக் கடலில் நாளை (7ம் தேதி) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த வாரத்தில் வங்காள விரிகுடாவில் உருவான ஃபெஞ்சல் புயல் வலுப்பெற்று, புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக புதுச்சேரி மற்றும் வட தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்து பெரும் சேதம் ஏற்பட்டது.அதற்கான மீட்புப்பணிகள் இன்னும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, தென்மேற்கு வங்கக் கடலில் நாளை புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரை பகுதியை வரும் 9ம் தேதி நெருங்கும் என்றும்,பின்னர் வரும் 12ம் தேதி இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாகவும் கணித்துள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வரும் 12 மற்றும் 13ம் தேதிகளில் தமிழ்நாட்டில் தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.