வாடிப்பட்டி:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ஜெயராம பாண்டியன் ஆலோசனையின்படி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஜெயக்குமார், ராஜ்குமார், சந்திரமோகன் ஆகியோர் வாடிப்பட்டி பகுதியில் உள்ள பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர்.
அப்போது வாடிப்பட்டி அருகே சாணம்பட்டியில் தேசிய நான்குவழிச் சாலை பாலத்தின் கீழ் பகுதியில் சேவை சாலையில் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துசாமி மனைவி சீதா(வயது 50) என்பவரது பெட்டிக்கடையில் வைத்திருந்த தடை செய்யப்பட்ட புகையிலை சிக்கியது.
அதைத் தொடர்ந்து அவரது வீட்டில் சோதனை செய்த போது 55 பாக்கெட்கள் கொண்ட ஒரு மூட்டையும், குலீப் 4 பவுச் சிறிய பாக்கெட் என 12 கிலோ 375 கிராம் மதிப்பு ரூ.42 ஆயிரமாகும். அதைக் கைப்பற்றி கடைக்கு சீல் வைத்து வாடிப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அதேபோல் தேனூர் ஊராட்சிக்கு உட்பட்ட திருவாலவாயநல்லூர் பிரிவில் மாரியம்மாள் டிபன் சென்டரில் லட்சுமணன் மனைவி லட்சுமி என்பவர் விற்பனை செய்ய வைத்திருந்த ரூ.300 மதிப்புள்ள 3 பவுச் கூலிப் சிறிய பாக்கெட்டினை பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்து சமயநல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் ராஜா முகமது, மாரியப்பன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.