Close
டிசம்பர் 12, 2024 4:38 மணி

பாரத்நெட் சேவை: கிராம பஞ்சாயத்துகளில் விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET), இணைய சேவைகளை வழங்குவதற்கு தொழில் பங்கீட்டாளர்களை ( Franchisee) வரவேற்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளையும் கண்ணாடி இழைக் கம்பி வடம் மூலம் இணைத்து குறைந்தபட்சம் 1 ஜிபிபிஎஸ் அளவிலான அதிவேக அலைக்கற்றை வழங்கும் “பாரத்நெட்” திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 09.06.2022 அன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தை (TANFINET) உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், தொழில் முனைவோர் மற்றும் வலையமைப்புத் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு முன்னுரிமையுடன் இந்த அரிய வாய்ப்பினை வழங்கி, தொழில் பங்கீட்டாளர்களாகத் தேர்வு செய்ய தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர்  பழனிவேல் தியாக ராஜன் அறிவுறுத்தியுள்ளார்.

இத்திட்டத்தின்கீழ், கிராமப் பஞ்சாயத்துகளில், தொழில் பங்கீட்டாளர்கள் (Franchisee Partners) மூலம் குறைந்த விலையில் தரத்துடன் இணைய சேவையை வழங்க முடிவுசெய்யப்பட்டு, முதல் கட்டமாக 960 கிராம பஞ்சாயத்துகளில் தொழில் பங்கீட்டாளர்களைத் (Franchisee) தேர்ந்தெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்பத் தொழில் பங்கீட்டாளர்கள் (Franchisee Registration) https://tanfinet.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவுசெய்ய செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதன் மூலம், கிராமப்புறங்களும் நகர்ப்புறங்களுக்கு இணையான வளர்ச்சி பெறுவதற்கும், கல்வி, மருத்துவத்துறையில் பெரும் மாறுதல்களை உருவாக்குவதற்கும் வழிவகை செய்வதுடன், தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பிற்கும் உறுதி செய்கிறது.

ஊரகப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள், இத்திட்டத்தில் பங்கேற்பதன் வாயிலாக அவர்களைத் தொழில் முனைவோராக உருவாக்குவதற்கு இது வழிவகை செய்யும்.

ஆகையினால், ஆர்வமுள்ள தொழில் முனைவோர் மற்றும் உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தித் தமிழ்நாடு அரசின், “ஒவ்வொரு வீட்டிற்கும் இணையதள வசதி” என்ற குறிக்கோளினை எய்திட அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டு வளர்ச்சிப் பாதையில் செல்லக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் இது குறித்த விவரங்களை அறியவும் மற்றும் பதிவு செய்வதற்கும் https://tanfinet.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top