Close
டிசம்பர் 12, 2024 9:41 காலை

2026ம் ஆண்டு தேர்தலில் மக்களே மைனஸ் ஆக்குவார்கள்..! தவெக தலைவர் விஜய் ஆவேசம்..!

'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய்

சென்னையில் நேற்று ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூலை விஜய் வெளியிட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொண்டார்.

இதை அடுத்து இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் “இன்று அம்பேத்கர் உயிரோடு இருந்திருந்தால், என்ன நினைப்பார்? இன்று இருக்கும் இந்தியாவைப் பார்த்து அவர் பெருமை அடைவாரா அல்லது வருத்தப்படுவாரா? அப்படியே வருத்தம் அடைந்தாலும் எதை நினைத்து வருத்தம் அடைவார்.

நம் நாடு வளர்ச்சி அடைய ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அதற்கு அரசியல் அமைப்புச் சட்டம் காக்கப்பட வேண்டும். அது நம் அனைவருக்கும் இருக்க வேண்டும். நான் ஆணித்தரமாகச் சொல்கிறேன். ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றால், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடக்க வேண்டும்.

தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்று சொல்லவரவில்லை. நடக்கிறது. ஆனால், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடக்க வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்கும் இருக்க வேண்டும். அப்படி நடக்க வேண்டும் என்றால், தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்துடன் நியமிக்கப்பட வேண்டும்.

ஏப்.14 அம்பேத்கரின் பிறந்தநாளை ஜனநாயக உரிமை நாளாக அறிவிக்க வேண்டும். இதனை இந்திய மத்திய அரசிடம் நான் முன்வைக்கிறேன்.

அம்பேத்கரைப் பற்றிச் சிந்திக்கும்போது கட்டாயமாகச் சட்டம்,ஒழுங்கு மற்றும் சமூக நீதியைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்க முடியாது. மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதைப் பற்றிக் கொஞ்சமும் கண்டுக்கொள்ளாத அரசு நம்மை மேலிருந்து ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

சமூக நீதி பேசும் இங்கு இருக்கும் அரசு, வேங்கைவயல் விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுத்ததுபோலவே எனக்குத் தெரியவில்லை. இத்தனை வருடங்கள் தாண்டி ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை. இதையெல்லாம் இன்று அம்பேத்கர் பார்த்தால் வெட்கப்பட்டுத் தலை குனியமாட்டாரா?

நடக்கும் பிரச்சினைகளுக்கு நாம் குரல் கொடுக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு, பெண்களுக்கு, மனித உயிர்களுக்கு எதிராக என எத்தனை பிரச்சினைகள். இதற்கெல்லாம் நிரந்தரமான தீர்வு மிகவும் எளிமையானது. நம் தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைப் பாதுகாப்புடன், முறையாக, முழுமையாக அளிக்கும் மக்களை உண்மையாக நேசிக்கும் ஒரு நல்ல அரசு அமைய வேண்டும்.

சம்பிரதாயத்திற்காக ட்விட் போடுவது, அறிக்கை விடுவது, நானும் மக்களுடன் மக்களாக இருக்கிறேன் எனக் காட்டிக்கொள்வது, மழை தண்ணீரில் நின்று போட்டோ எடுப்பது என்பதில் எனக்குக் கொஞ்சமும் உடன்பாடு இல்லை. ஆனால், நாமும் சில சமயங்களில் சம்பிரதாயத்திற்கு அப்படி நடக்க வேண்டியதாக ஆகிவிடுகிறது. மக்களின் உரிமைகளுக்காக அவர்களுடன் உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும்.

என்னை அவர்களின் குடும்பத்தில் ஒருவராக நினைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு, தமிழ்நாட்டில் அவர்களுக்கு எங்கு என்ன பிரச்சினை வந்தாலும், அவர்களின் உரிமைகளுக்காக அவர்களுடன் உணர்வுப்பூர்வமாக நிற்பேன்.

மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத, அடிப்படை சமூக நீதியான பாதுகாப்பைக் கூட உறுதி செய்ய இயலாத கூட்டணிக் கணக்குகளை மட்டுமே நம்பி இருமாப்புடன் இருநூறு வெல்வோம் என எகத்தாளம் முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடும் எச்சரிக்கை, நீங்கள் உங்கள் சுயநலனுக்காகப் பல வழிகளில் பாதுகாத்துவரும் கூட்டணிக் கணக்குகள் அனைத்தும் 2026-ல், மக்களே மைனஸாக்கி விடுவார்கள்.

விசிக தலைவர் தொல். திருமாவளவனால் இன்று வரமுடியாமல் போனது. அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவிற்குக் கூட அவரால் கலந்துகொள்ள முடியாத அளவிற்குக் கூட்டணிக் கட்சிகள் சார்ந்து எவ்வளவு அழுத்தம் இருக்கும் என என்னால் யூகிக்க முடிந்தாலும், நான் இப்போது சொல்கிறேன். அவரின் மனம் முழுக்க இன்று நம்மோடுதான் இருக்கும்” இவ்வாறு அவர் பேசினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top