தெற்கு வங்கக் கடல் பகுதியில் இன்று(7ம் தேதி) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :-
இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.
மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 12ம் தேதி வியாழக்கிழமை அன்று இலங்கை-தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரலாம். இதனால், வரும் புதன் மற்றும் வியாழக்கிழமை அன்று, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூரில் கனமழை பெய்யும். இதேபோல புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்காலிலும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் கனமழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரியிலும் அடுத்த வாரம் வியாழக்கிழமை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் அதிகாலை லேசான பனிமூட்டம் இருக்கலாம். அதே சமயம், சென்னையின் ஒரு சில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.