Close
டிசம்பர் 12, 2024 10:27 காலை

சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் பயங்கர தீ : ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சாம்பல்..!

எரிந்து சாம்பலான மலேரியா கட்டுப்பாட்டு அலுவலகம்

திருவள்ளூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு கம்ப்யூட்டர், ஏசி, பிரிண்டர் என பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எரிந்து சாம்பலானது. மாவட்டத்தில் உள்ள மக்களின் மருத்துவ குறிப்புகளும் எரிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் வடக்கு ராஜ வீதியில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் பணிகள் முடித்து அலுவலகத்தை அதிகாரிகள் பூட்டிச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் திடீரென காலை 6.30 மணி அளவில் அலுவலகத்தில் இருந்து புகை வருவதை அறிந்த அலுவலகத்தின் இரவு காவலர், தீயணைப்புத் துறைக்கு அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அலுவலகத்தில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

இதனை அடுத்து எரிந்த அலுவலகம் மாவட்ட மலேரியா அலுவலர் மதியழகன் அலுவலகம் என்பதும் இதில் அலுவலகத்தில் இருந்த 8க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் 3க்கும் மேற்பட்ட ஏசி, பிரிண்டர் என 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளது.

மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மலேரியா விவரங்கள் குறித்த ஆவணங்கள் முழுமையாக தீயில் கருகி உள்ளதால் மீண்டும் மலேரியா விவரங்களை சேகரிப்பது மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்திற்கு ஒரு சவாலாகவே இருக்கும் எனவும், இதனால் மலேரியா குறித்த பொதுமக்களின் விவரங்கள் அடிப்படையில் நோய்களுக்கு தீர்வு கொடுப்பது கடினமாக இருக்கும் எனவும் தெரியவந்துள்ளது

இது குறித்து திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top