Close
டிசம்பர் 12, 2024 11:50 காலை

முத்திரைத்தாள் கட்டணங்கள் உயர்வு

பத்திரப்பதிவு துறையில் 20 வகையான பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

வீடு, நிலம் வாங்கும்போது, வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மென்ட் என பலவற்றுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை நிலம்-வீடு விற்பனை தவிர பல்வேறு இனங்களுக்கான ஆவணங்களையும் பதிவு செய்ய முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது.

வீடு, நிலம் வாங்கும்போது, வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மென்ட் போன்றவற்றை பத்திரங்களில் பதிவு செய்ய மக்கள் பணம் கட்டி முத்திரைத்தாள் வாங்க வேண்டும்.

முத்திரைத்தாள் கட்டணம் மூலமாக அரசாங்கம் கருவூலத்துக்குத் தேவையான வரி கிடைக்கும்.

அதில் குறிப்பிட்ட சில இனங்களுக்கான முத்திரத்தாள் கட்டணம் கடந்த 2001-ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

இதுவரை குறைந்தபட்ச கட்டணம் ரூ.20 இருந்த நிலையில், அந்த கட்டணம் தற்போது இது ரூ.100, 200, 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

உறுதிமொழி ஆவணத்திற்கு ரூ.20 ஆக இருந்த முத்திரைத்தாள் கட்டணம் ரூ.200 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

உயர்த்தப்பட்டுள்ள முத்திரைத்தாள் இனங்கள் அதற்கு தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் மற்றும் அடைப்புக்குறிக்குள் பழைய கட்டணங்கள் ரூபாயில் விவரங்களை இப்போது பார்ப்போம்.

1).ஒப்பந்தம் – 200 (20),

2).தத்தெடுப்பு ஆவணம் – ரூ.1,000 (ரூ.100),

3).நிறுவன விதிமுறைகள் – ரூ.10 லட்சத்திற்கு 500 வரை, அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை (300),

4).ரத்து ஆவணம் – 1,000 (50),

5).நகல் கட்டணம் – 100 (20),

6).அசல் நகல் – 500 (20),

7).நிறுவன குறிப்பாணைகள் – 200 (200 அல்லது 500),

8).குடும்ப உறுப்பினர்கள் அல்லாத சொத்து பிரிவினை மார்க்கெட் மதிப்பில் அந்த பங்கிற்கான 4 சதவீதம் (பங்கிற்கான 4 சதவீத மதிப்பு),

9).கூட்டு ஒப்பந்தம் – 1,000 (300),

10).பவர் பத்திரம் – 1,000 (5 முதல் 175 வரை),

11).குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவருக்கு பவர் பத்திரம் – சந்தை மதிப்பில் ஒரு சதவீதம்,

12).அடமான மறுபரிமாற்றம் – 1,000 (80),

13).பாதுகாப்பு பத்திரங்கள் – 1,000 (80),

14).ஒப்பந்ததை ரத்து செய்தல் – 1,000 (80),

15).குத்தகையை விடுவித்தல் – 1,000 (40),

16).டிரஸ்டிற்குள் பரிமாற்றம் – 1,000 (30),

17).டிரஸ்ட் அறிவித்தல் – 1,000 (180),

18).டிரஸ்ட் உரிமையை மீட்டெடுத்தல் -1,000 (120).மேற்கண்ட கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு வெளியிட்ட அறிவிப்பின் படி, செட்டில்மென்ட் பத்திரங்களுக்கான பதிவுக் கட்டணம் ரூ.10,000 ஆகவும் முத்திரைத் தீர்வை கட்டணம் ரூ.40,000 ஆகவும் பொது அதிகார ஆவணங்களுக்கான கட்டணம் ரூ.10,000 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவுக் கட்டணம்‌ ரூ.4,000-லிருந்து ரூ.10,000 எனவும்‌, அதிகபட்ச முத்திரை தீர்வை ரூ.25,000-லிருந்து ரூ.40,000 எனவும்‌, தனி மனை பதிவுக்கான கட்டணம்‌ ரூ.200-லிருந்து ரூ.1,000 எனவும்‌, குடும்ப உறுப்பினர்கள்‌ அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக்‌ கட்டணம்‌ ரூ.10,000 என்று உள்ளதை சொத்தின்‌ சந்தை மதிப்புக்கு ஒரு சதவிகிதம்‌ எனவும்‌ மாற்றியமைக்கப்படுவதாக தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு பத்திரப்பதிவு துறையில் பெரிய அளவிலான ஒப்பந்தங்கள், பத்திரப்பதிவு தொடர்பான விஷயங்களுக்கு முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த முறை லீஸ், ரத்து ஆவணம்,பவர் பத்திரம், உள்ளிட்ட சிறிய அளவிலான பண மதிப்புடைய முத்திரைத்தாள் ஆவணங்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 20 ரூபாய்க்கு இனி பத்திரம் வாங்க முடியாது. அந்த பத்திரம் இனி 200 ரூபாய் ஆகும்.

இப்படி பல பத்திரங்களின் முத்திரைத்தாள் கட்டணங்கள் இப்போது உயர்ந்துள்ளது.

நன்றி தகவல் உதவி: தமிழ் உலகம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top