Close
டிசம்பர் 12, 2024 2:27 மணி

டங்ஸ்டன் சுரங்க முடிவை கைவிட பரிசீலனை : பா.ஜ.க தலைவர் அண்ணாமலை..!

தமிழ் நாடு பாஜ தலைவர் அண்ணாமலை -கோப்பு படம்

டங்ஸ்டன் சுரங்க முடிவை கைவிடுவது குறித்து பரிசீலிக்க உள்ளதாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதி அளித்துள்ளார் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று, மதுரையில் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யவேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதி இல்லாமல் சுரங்க உரிமை ஏலத்தினை மேற்கொள்ளக்கூடாது என்பதை மத்திய அரசுக்கு வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வர இருக்கிறார்.

இந்த சூழலில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் கடிதம் மூலமாகவும் தொலை பேசி மூலமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிடுவது குறித்து பரிசீலிக்க உள்ளதாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதி அளித்துள்ளார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க., அரசின் தவறான முழுமையற்ற தகவல்களால் மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை பொதுமக்கள் எதிர்க்கும் சூழல் உருவாகியுள்ளது.

இது தொடர்பாக,மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு கடிதம் எழுதியதோடு, மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, கவட்டையம்பட்டி, எட்டிமங்கலம், ஏ.வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ள பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து தொலைப்பேசியிலும் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

அவர் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிடுவது குறித்துப் பரிசீலிக்கிறேன் என்று உறுதி அளித்துள்ளார். மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது குறித்து தி.மு.க அரசு தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் மட்டுமே இந்தச் சுரங்கம் அமைப்பது குறித்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது, பொதுமக்கள் எதிர்ப்பதால் திமுக அரசு நாடகமாடிக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான நல்லாட்சியில் விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப் பட்டிருக்கின்றன. விவசாயிகள் நலனுக்கு எதிரான எந்தச் செயல்பாடுகளையும் நமது பிரதமர் மோடி மேற்கொள்ள மாட்டார் என்பது உறுதி. இவ்வாறு பாஜக தலைவர் அண்ணாமலை அவரது அறிக்கையில் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top