உசிலம்பட்டி:
மதுரை,உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில், முறையான சாக்கடை கால்வாய் வசதி செய்துதரக் கோரி நகராட்சி அதிமுக கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 8 -வது வார்டு காளியம்மன் கோவில் தெருவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முறையான சாக்கடை வசதி இல்லை என கூறப்படுகிறது.
சாக்கடை கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் ஆங்காங்கே தேக்கமடைந்து காணப்படுவதால், அடிக்கடி நோய் தொற்று ஏற்படுவதாகவும் இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த வார்டு அதிமுக கவுன்சிலர் பூமா ராஜா தலைமையில் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் மன்றத் தலைவர் சகுந்தலா தலைமையிலான நகராட்சி அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் உரிய நடவடிக்கை எடுத்து சாக்கடை வடிகால் அமைக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.