காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 493 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
இன்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணிபுரிந்த சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 2 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு இணையவழி பட்டாவினையும் வழங்கி,
திருப்பெரும்புதூர் வட்டம், எடையார்பாக்கம் கிராமத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த செல்வன்.ராஜேஷ் என்பரின் பெற்றோர் காமாட்சி அவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ.1 இலட்சத்துக்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்கள்.
இந்நிகழ்வினை தொடர்ந்து கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய திருப்பெரும்புதூர் ஸ்பார்க் மிண்டா (SPARK MINDA) நிறுவனம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடமிருந்து மாநில அளவில் சிறந்த தனியார் நிறுவனத்திற்காக பெற்ற விருதினை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நிறுவன மனிதவள மேம்பாட்டு நிர்வாகிகள் சி.கிருஷ்ணவேணி மற்றும் ஆர்.ரஞ்சித் ஆகியோர் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி. ஆர்த்தி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பாலாஜி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.