Close
டிசம்பர் 12, 2024 1:46 மணி

மாணவர்களை தரக்குறைவாக பேசும் தலைமை ஆசிரியை : இடமாற்றம் செய்ய மாணவர்கள் போராட்டம்..!

வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்

பெரியபாளையம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்ய மாணவர்கள் மாற்றம் செய்ய வலியுறுத்தி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். தலைமை ஆசிரியை மாணவர்களை தரக்குறைவாக பேசுவதாக புகார்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த திருக்கண்டலம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியையை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரியை பாரபட்சமின்றி மாணவர்களை தரக்குறைவாக பேசி வருவதாகவும்,

பலமுறை பெற்றோர் முறையிட்டும் அதேபோன்ற நடவடிக்கை தொடர்வதால் தலைமை ஆசிரியையை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் பள்ளியின் வெளியே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆசிரியர்கள் அரையாண்டு தேர்வு என்பதால் வகுப்புகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியதை தொடர்ந்து மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்றனர்.

தொடர்ந்து பள்ளிக்கு வந்த பெற்றோர் தலைமை ஆசிரியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாணவர்களை தரக்குறைவாக விமர்சிப்பது ஏன் எனவும் பாகுபாடு காட்டுவதாகவும் குற்றம் சாட்டினர்.

இந்த தலைமை ஆசிரியை பள்ளியில் இருந்தால் மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு பாதிக்கப்படும் எனவும், மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதை விடுத்து தலைமை ஆசிரியை மாணவர்களின் கல்வி பாதிக்கும் வகையில் செயல்படுவதால் அவரை வேறு இடத்திற்கு மாற்றி புதிய தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும் என கேட்டு கொண்டனர்.

மாணவர்கள் போராட்டம் குறித்து தகவல் அறிந்த காவல்துறை மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பெற்றோர் கலைந்து சென்றனர்.

இதனிடையே பள்ளியின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை செய்து வருவதாகவும் மாணவர்களின் நலனுக்காக சக ஆசிரியர்களை கடிந்து கொள்வதாகவும் இதன் காரணமாகவே தம்மீது வீண் பழி சுமத்தப்படுவதாக பள்ளி தலைமை ஆசிரியை ஷாமிலி தகவல் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top