தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 03 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.08,500 வீதம் என மொத்தம் ரூ.25,500 மதிப்பிலான பிரெய்லி ரீடர்கள் மற்றும் 03 மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாவலர் நியமன சான்றுகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 41 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.4.58 கோடி மதிப்பிலான கடனுதவிக்கான காசோலைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் வழங்கினார்.
தொடர்ந்து, இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 645 மனுக்கள் பெறப்பட்டன.
பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செல்வக்குமார், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) ஷேக் அயூப், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.