விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் ஒட்டம்பட்டு கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் திருநாவுக்கரசு. இவர் பணியில் இருந்தபோது அதே ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் திருமலை என்பவர் கிராம நிர்வாக அதிகாரியை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி அனந்தபுரம் போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில், தரக்குறைவாக பேசியவரை கைது செய்யக்கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த திண்டிவனம் உதவி ஆட்சியர் திவ்யான்ஷி நிகம், செஞ்சி துணைபோலீஸ் கண்காணிப்பாளர் கார்த்திகா பிரியா ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்ததின் பேரில் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.