சோழவந்தான்:
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சி வடகாடு பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவர், மன்னாடிமங்கலம் ஊராட்சி தாமோதரன்பட்டி, நாகமலை அடிவாரத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கோழிப்பண்ணை அமைத்து பராமரித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் திடீரென கோழிப்பண்ணை தீப்பிடித்து எரிந்ததில் கோழிப்பண்ணை முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இதில், கோழி பண்ணையில் இருந்த கோழிகள் எரிந்து தீக்கு இரையாகின.
உரிமையாளர்கள் அருகில் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இருந்தாலும் பண்ணையில் இருந்த சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள கோழி தீவனம் முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்ததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பண்ணை உரிமையாளர் ராஜாமணி கூறுகையில்,
நான், கடந்த 20 ஆண்டுகளாக இந்த கோழி பண்ணை வைத்து நடத்தி வருகிறேன். இதுவரை எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஆனால், இன்று(நேற்று) 12 மணி அளவில் திடீரென கோழிப்பண்ணை தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. உடனடியாக சோழவந்தான் தீயணைப்பு துறைக்கும் காடுபட்டி காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் சுமார் 50 சென்ட் நிலத்தில் இருந்த கோழிப்பண்ணை முழுவதும் எரிந்து நாசமாகியது. சுமார் 15 லட்சம் மதிப்புள்ள கோழிப்பண்ணை யின் மேல் செட்டுகள் ஒரு லட்சம் மதிப்புள்ள கோழி தீவனப் பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதம் அடைந்ததால் எனது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
காவல்துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது குறித்து, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் நேரில் ஆய்வு செய்து சேதம் அடைந்த கோழிப்பண்ணைக்கு அரசிடமிருந்து நிவாரணம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.
சுமார் 15 லட்சம் மதிப்புள்ள கோழிப்பண்ணை எரிந்து சேதம் அடைந்ததால் ராஜாமணி குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தமிழக அரசு சேதமடைந்த கோழிப்பண்ணைக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என, பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.