சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் நேற்று இரவு நடந்த கொலை வெறி தாக்குதலில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார். சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் பிடித்து ரயில்வே காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் செல்வராஜ். நேற்று இரவு சென்னை செல்வதற்காக சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் பொதிகை அதிவிரைவு ரயிலுக்காக காத்திருந்தபோது அரிவாளுடன் வந்த ஒருவர் செல்வராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினார்.
சம்பவம் குறித்து சங்கரன்கோவில் நகர் காவல் துறையினர் மற்றும் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். நேற்று இரவு முழுவதும் விசாரணை மேற்கொண்டு தேடி வந்த நிலையில் அப்பகுதியில் பதுங்கி இருந்த வாசுதேவநல்லூர் கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்த ராசையா என்பவரது மகன் கண்ணன் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், கண்ணன் காதலிக்கும் பெண்ணிடம் செல்வராஜ் பேசியதால் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
கண்ணனை கைது செய்த சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்பு ரயில்வே போலீசார் கண்ணனை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
ரயில் நிலையத்தில் நடந்த இந்த கொடூர அரிவால் தாக்குதல் பயணிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் குற்றவாளி கைது செய்யப்பட்டிருப்பது நிம்மதி அளித்துள்ளது.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தர்கள் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலுக்கு வந்து செல்லக்கூடிய பிரதானமான ரயில் நிலையமாக சங்கரன்கோவில் உள்ளது. சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் பயணிகள் வந்து செல்லும் இடங்களில் ஒரு சிசிடிவி கேமரா கூட இல்லாதது பாதுகாப்பு குறைபாட்டை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு சிசிடிவி கேமரா இல்லாதது தவறு செய்யும் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு ஏதுவாக இருக்கும். ஆகவே, உடனடியாக சங்கரன்கோவில் ரயில் நிலையம் முழுவதும் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் என பயணிகள் மற்றும் பொதுமக்கள் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.