Close
டிசம்பர் 12, 2024 12:44 மணி

வேதனையின் உச்சத்தில் பெரியாறு விவசாயிகள்..!

முல்லை பெரியாறு அணை

பெரியாறு பாசனத்தின் மூலம் பலன் பெறும் ஐந்து மாவட்ட விவசாயிகள் வேதனையின் உச்சத்தில் உள்ளனர்.

இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: சமீபகாலமாக கேரளா தமிழகத்தின் மீது நிகழ்த்தி வரும், உரிமை பறிப்பு வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தன்னுடைய அனைத்து வகை தேவையிலும் 60 விழுக்காடு வரை தமிழகத்தைச் சார்ந்திருக்கும் கேரளா, எந்தப் பின்னணியில் தமிழகத்தின் இறையாண்மையை கேள்வி கேட்கிறது என்று நமக்குப் புரியவில்லை.

தனக்கு அருகாமையில் இருக்கும் கர்நாடகத்திடம் அடக்கி வாசிக்கும் கேரளா, தமிழகத்தை கிள்ளுக்கீரையாக நினைப்பதற்கு பின்னணியில் எது இருக்கிறது என்று தெரியவில்லை.

முல்லைப் பெரியாறு அணையில் மராமத்து பணிகளை செய்வதற்காக  கடந்த வாரம்  தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்களால், அணைக்கு கொண்டு செல்லப்பட்ட வெறும் இரண்டு யூனிட் எம்.சாண்ட் ஏற்றப்பட்ட  இரண்டு வண்டிகளை, அணைக்குள் அனுமதிக்கவே முடியாது என்று ஒரு வாரம் காத்திருக்க வைத்து திருப்பி அனுப்பி இருக்கிறது பெரியார் புலிகள் காப்பகம்.

கடந்த புதன்கிழமை வல்லக்கடவு சோதனை சாவடியில் மறிக்கப்பட்ட இரண்டு வண்டிகளும், ஆறு நாட்களுக்குப் பிறகு செவ்வாய் கிழமை திருப்பி தமிழகத்தை நோக்கி அனுப்பப்பட்டு இருக்கிறது.

வண்டிகளை பெரியாறு அணைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று போராடிய எங்களின் மீது (விவசாயிகள் மீது) தேனி மாவட்ட காவல்துறையால் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்கிறோம். ஆனால் வண்டிகளை திருப்பி தமிழகத்தை நோக்கி அனுப்பும் அளவிற்கு கேரளாவிற்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுப்பது யார் என்கிற கேள்வி பிறக்கிறது.

ஆனால் வெறும் நான்கு யூனிட் எம்.சாண்டை கேரளா வழியாக, முல்லைப் பெரியாறு அணைக்கு கொண்டு செல்வதற்கு  அனுமதி இல்லை என்றால் என்ன வகையான ஜனநாயகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஏன் தேனி மாவட்ட ஆட்சியர் இதைப்பற்றி பேசவில்லை. அணையில் சிறிய சிறிய மராமத்து வேலைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்வது, தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு பிடிக்கவில்லையா…?

இதைவிட கொடுமையாக, கேரள வனத்துறையிடமும் மைனர் இரிகேசன் டிபார்ட்மெண்டிடமும் அனுமதி பெறாமல் எம்‌.சாண்டை கொண்டு சென்றதாக அபாண்டமாக அணை பொறியாளர்கள் மீது பழி வேறு சுமத்தப்பட்டு இருக்கிறது.

ஆனால் அணையில் உள்ள 16 வேலைகளை செய்வதற்காக, கடந்த மே மாதம் ஏழாம் தேதி ஒரு அனுமதியும், ஜூலை மாதம் ஒரு அனுமதியும், ஆகஸ்ட் மாதம் ஒரு அனுமதியும், மேற்படி கேரளாவைச் சேர்ந்த மைனர் இரிகேசன் டிபார்ட்மெண்டிடம் தமிழக பொறியாளர்கள் அனுமதி கோரியுள்ளனர் என்பதை ஆவணங்களில் இருந்து நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையினுடைய நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுப்பதற்கு முன்னாலேயே இந்த மைனர் இரிகேஷன் டிபார்ட்மெண்ட் பெரியார் புலிகள் காப்பக இணை இயக்குனரிடம் மனு ஒன்றை அளித்ததோடு, இனி அணையில் தமிழக பொறியாளர்கள் ஏதாவது மராமத்து வேலை செய்வதற்கு பொருட்களை வல்லக்கடவு சோதனை சாவடி வழியாக கொண்டு வந்தால், எங்களுடைய அனுமதி இல்லாமல் நீங்கள் உள்ளே விடக்கூடாது என்று கலகத்தை தொடங்கி இருந்தார்கள்.

அதுவரை இலை மறை காயாக இருந்து வந்த இந்த மைனர் இரிகேசன் டிபார்ட்மெண்டின் ஆதிக்கம் 2014 ஆம் ஆண்டு தான் முழுமையாக வெளிப்பட ஆரம்பித்தது. நேற்று மதியம் வண்டிகள் திருப்பி அனுப்பப்பட்ட பிறகு அது நமக்கு விடப்பட்ட சவாலாக பார்க்காமல், வரும் 12 ஆம் தேதி கோட்டயத்தில் நடைபெறும், வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள செல்கிறார் நம்முடைய  முதல்வர்.

ஏக்கருக்கு 30 ரூபாய் வீதம் நாம் வரி கட்டிக் கொண்டிருக்கும் 8,540 ஏக்கர்களை விட்டு கேரளா முற்றாக வெளியேற வேண்டும் என்பதுதான் நம்முடைய திட்டவட்டமான கோரிக்கை.

சென்னை ராஜதானி முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேங்கும் பகுதியில் நட்டிய 24 எல்லை கற்கள் இன்னமும் உயிரோடு இருக்கும் நிலையில், அந்தப் பகுதியை முற்றாக தமிழக பொதுப்பணித்துறையிடம் கையளிப்பு செய்ய வேண்டும்.

எல்லைப் பகுதியில் தொடர்ந்து போராடும் எங்களைப் போன்ற விவசாயிகளின் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். நம்மை மட்டுமே நம்பி இருக்கும் கேரளாவிடம், நம்முடைய அரசு, நம்முடைய முதல்வர், இத்தனை தூரம் இறங்கிப் போக வேண்டுமா என்கிற கேள்வி எங்கள் எல்லார மனதிலும் எழுகிறது…!

சாட்டையை நம்முடைய முதல்வர் கையில் எடுத்தால், அடுத்த இரண்டு மாதத்தில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக போகிற போக்கில் உயர்த்தி விட்டு போய்விட முடியும் என்பதை, ஒரு சவாலாக நம்முடைய முதல்வர் எடுத்துக் கொள்வார் என்று நம்புகிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top