தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை-தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கையைத் தாண்டி ராமேஸ்வரம், தூத்துக்குடி அருகே மன்னார் வளைகுடா அருகே நிலைகொண்டு இருக்கிறது. இதனால் தான் நேற்றிரவு முதல் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் நகர்ந்து டெல்டா மற்றும் தென் தமிழகம் வழியாக அரபிக்கடலுக்குச் செல்கிறது. இதனால், இன்றும், நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை இன்று இரவுவரை விட்டுவிட்டு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுளளது. இன்று டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி அரபிக்கடல் நோக்கி நகரும் என்பதால் தென் தமிழகத்தில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மன்னார் வளைகுடா வழியாக செல்வதால் தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் இன்றிரவு முதல் நாளை வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுளளது.
இதற்கிடையே இன்று காலை 8 மணி நிலவரப்படி, மழை மேகங்கள் சென்னை முதல் தூத்துக்குடி வரை கடலோர பகுதிகளிலும் டெல்டா மற்றும் திருநெல்வேலி போன்ற தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் சூழ்ந்து காணப்படுகிறது.
இதனால் சென்னை உட்பட வட தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. ஆனால், மழை மேகங்கள் படிப்படியாக நகர்ந்து உள்மாவட்டங்களுக்கு செல்லும் வாய்ப்புள்ளது. அதன்படி இன்று இரவுக்குள்ளாகவே தென் மாவட்டங்களுக்கு மழை மேகங்கள் நகர்ந்து செல்லக்கூடும் என்பதால், நாளை டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன. அதேவேளை நாளை சென்னையில் மழையின் பாதிப்பு வெகுவாக குறைந்துவிடும்.
காற்றழுத்த தாழ்வு பகுதி மன்னார் வளைகுடாவை நெருங்குவதால் அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்றும் கூரப்பப்பட்டுளளது.