சோழவந்தான் :
மதுரை மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காததால் மழையில் நனைந்தபடி பள்ளிக்கு செல்லும் மாணவிகள்.. கடும் அவதி அடைந்தனர்
மதுரை மாவட்டத்தின் சோழவந்தான் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வந்த நிலையில் மதுரை மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால், பல்வேறு பகுதிகளில் மாணவ மாணவிகள் மழையில் நனைந்தபடி பள்ளிக்குச் சென்றனர்.
சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பகுதியில் இன்று அதிகாலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை பெய்துவரும் நிலையில் மதுரை மாவட்டத்துக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. அதனால் மாணவிகள் நனைந்த படியும், குடையை பிடித்தபடியும் பள்ளிக்குச் சென்றனர்.
மேலும் மாணவிகளின் பெற்றோர் மழையில் நனைந்தபடி இருசக்கர வாகனங்கள், மிதிவண்டிகளில் மாணவிகளை பள்ளியின் முன்னால் இறக்கி விட்டுச் சென்றனர். தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு மட்டுமாவது விடுமுறை அளித்திருக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதேபோன்று முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி, சோழவந்தான் ஆலங்கொட்டாரத்தில் உள்ள அரசன் சண்முகனார் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கும் மாணவ,மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.