சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் ஏரி அதன் மொத்த அடியான 35 அடியில் 34 அடியை ஏட்டியுள்ளதால் நீர்வளத் துறையினர் உபரிநீர் திறக்க ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி உள்ளது. இந்த ஏரிக்கு நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நதி நீர் ஆகியவை முக்கிய நீர் ஆதாரங்களாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த பெஞ்சல் புயல் காரணமாகவும் தற்போது பெய்துள்ள கனமழை காரணமாகவும் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.ஏற்கனவே கடந்த செப்டம்பர் 23-ம் தேதி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் வினாடிக்கு 300 கன அடி என்ற வீதத்தில் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பெய்து வரும் கன மழை காரணமாக தற்போது நீர் பிடிப்பு பகுதியிலிருந்து வினாடிக்கு 1290 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.இதன் காரணமாக பூண்டி ஏரியின் அதன் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் தற்போது 2839 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
ஏரியின் மொத்த அடியான 35 அடியில் 34.05 அடியாக தண்ணீரின் உயர்ந்து உள்ளது,
மேலும் 88% ஏரி நிரம்பியுள்ள நிலையில் கொசஸ்தலை ஆற்றில் உபரி நீர் திறப்பதற்கு குறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து நீர்வரத்து அதிகரித்தால் உபரி நீர் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், நீர்வளத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அணையை கண்காணித்து வருவதாகவும் நீர்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கரையோர மக்களுக்கும் எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.