Close
டிசம்பர் 12, 2024 12:27 மணி

வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தில் தொழில் முனைவோர்,பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..!

மகளிர் தொழிற்கூடங்களை பார்வையிட்ட மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா

மதுரை :
மதுரை மாவட்டம், ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் கீழ் 137 ஊராட்சிகளில் இதுவரை 24,117 தொழில் முனைவோர்கள் மற்றும் பயனாளிகளுக்கு ரூ.39.93 கோடி மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்தார்.

மதுரை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ” வாழ்ந்து காட்டுவோம் திட்டம்” செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா,மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், திருமோகூர் ஊராட்சியில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.

குறிப்பாக, திருமோகூரில் உள்ள வளையாபதி திருமண மஹாலில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பயனடைந்து தொழில் முனைவோராக உயர்ந்துள்ள பல்வேறு மகளிர் குழுக்கள் மூலம் அவர்களின் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, பார்வையிட்டார்.

அதன்பின்பு, திருமோகூரில் செயல்பட்டு வரும் செம்பருத்தி தையல் தொழில் குழுக்கூடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டு மகளிருடன் கலந்துரையாடினார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., தெரிவித்ததாவது:-

வாழ்ந்து காட்டுவோம் திட்டம் (VKP) உலக வங்கியின் நிதி உதவியுடன் தொடங்கப்பட்ட ஒரு தனித்துவம் வாய்ந்த திட்டமாகும். இத்திட்டம் ஊரக பகுதிகளில் தொழில் மேம்பாடு, நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவற்றின் மூலம் சமுதயாத்தில் நிலையான வளர்ச்சி என்பதை நோக்கமாகக் கொண்ட தனித்துவமிக்க திட்டமாகும். இத்திட்டம், துணை முதலமைச்சர், மேற்பார்வையில் செயல்பட கூடிய சிறப்பு திட்டமாகும்.

இத்திட்டம் மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி ஆகிய நான்கு வட்டங்களில் 137 ஊராட்சிகளில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சுய உதவி குழுபெண்கள் மற்றும் அவர் குடும்பத்தை சார்ந்து உறுப்பினர்கள். முதன்மை பயனாளிகளாக பயன்பெற தகுதி உடையவர்கள், பெண்கள், ஆதிதிராவிட பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திட்டத்தின் வாயிலாக உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்குதல், தொழில் குழுக்களை உருவாக்குதல், உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்குதல், தொழில் நிறுவனங்களுக்கு இணை மானிய நிதி மற்றும் நுண் நிறுவன நிதி மூலம் நிதி உதவி வழங்குதல் மற்றும் சமுதாய பண்ணை பள்ளி மற்றும் சமுதாய திறன் பள்ளி மூலம் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தொழில் குழுக்கள் என்பது ஒரே வகையான தொழில் ஈடுபட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களைக் கொண்டு 42 தொழில் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களது தொழில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக இதுவரை ரூ.31,50,000/- நிதி வழங்கப்பட்டு தொழில் உதவி வழங்கப்பட்டுள்ளது. உற்பத்தி குழுக்கள் என்பது உற்பத்தியாளர் குழுக்கள் என்பது உற்பத்தியாளர்கள் குழுவாக ஒன்றிணைந்து உற்பத்தித் திறனை அதிகரித்தல், உபரி விளைப்பொருட்களை ஒன்று திரட்டுதல், இதர கூட்டு நடவடிக்கைகளுக்காக ஒன்றிணைந்து உற்பத்தியாளர்களின் வருமானம் மற்றும் இலாபத்தை அதிகரித்தல் ஆகும்.

புதிதாகத் தொடங்கப்பட்ட உற்பத்திக் குழுக்களுக்கு தொடக்க நிதி மானியமாக தலா ரூ.75,000/- வீதம் 108 குழுக்களுக்கு மொத்தந்தொகை ரூ.81 இலட்சம் தொடக்க நிதி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

உற்பத்தியாளர் நிறுவனம் விவசாய உற்பத்தியாளர் குழுக்களில் இருந்து ஆர்வமுடைய மகளிர் உற்பத்தியாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களே முன்னின்று நடத்தும் வகையில் மேலூர் வட்டாரத்தினை தலைமை இடமாகக் கொண்டு மதுரை பலப்பயிர் உற்பத்தியாளர் நிறுவனம் புதிதாக தொடங்கப்பட்டு தலா ரூ.30 இலட்சம் நிதி உதவிகள் மூலம் தொழில்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இக்கூட்டமைப்பின் மகளிர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களது விளை பொருட்களை ஒருங்கிணைத்தல், மதிப்ப கூட்டுதல், மாட்டு தீவனம் உற்பத்தி, சந்தைப்படுத்துதல் மற்றும் உறுப்பினர்களுக்கு சேவை வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவிட்-19 நிதி பெருந்தொற்று காலத்தில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் (VPRC) மூலமாக ஒவ்வொரு ஊராட்சிக்கு தலா ரூ1,25,000/- மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு(PLF) மூலமாகவும் தலா ரூ.4,00,000/- மற்றும் புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய திறன் பெற்ற இளைஞர்களுக்கு (SYMR) தனிநபர் தொழில் கடனாக தலா ரூ.1,00,000/- நிதியும் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 3,331 பயனாளிகளுக்கு ரூ.9.06 கோடி மதிப்பிலான தொகை மகளிர் கூட்டமைப்பின் வயிலாக தொழில் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

NEFF- Nano Enterprise Financing Fund (NEFF) – PLF என்ற வங்கி கணக்கிற்கு கோவிட்-19 100 சதவீதம் கடன் திருப்பம் செய்த ஊராட்சிகளில் உள்ள தொழில் முனைவோர்களுக்கு, பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு மூலம் மீண்டும் கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதில், இதுவரை 113 பஞ்சாயத்துகளில் 900 நபர்களுக்கு ரூ.4.58 கோடி மதிப்பிலான கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

இணை மானிய நிதி ஊரகப்பகுதிகளில் உருவாக்கப்படும் தனிநபர் மற்றும் குழு தொழில்களுக்கு தேவையான நிதயினை இணை மானிய நிதி திட்டத்தின் (Matching Grand Program) மூலமும், பிற நிதி நிறுவனங்களின் நிதி சேவை மூலமும் பெற்றுத் தருதல் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் திட்ட செயல்பாட்டின் மூலம் மதுரை மாவட்டத்தில் 340 நபர்களுக்கு (குறிப்பாக பெண் தொழில் முனைவோர்கள் மொத்தம் 233 பெண்களுக்கு) தொழிலை மேம்படுத்துதல் மற்றும் புதிதாக தொழில் அமைப்பதற்காக 30 சதவீதம் மானியத் தொகையாக ரூ.3.68 கோடி மனியத்துடன் ரூ.11.14 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கி தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சமுதாய பண்ணை பள்ளி இதுவரை 171 சமுதாய பண்ணை பள்ளிகளுக்கு ரூ.13.61 கோடி மதிப்பிலான உதவிகள் வழங்கி விவசாய உற்பத்தியினை பெருக்கி தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. சமுதாய திறன் பள்ளி இதுவரை 81 சமுதாய திறன் பள்ளிகளுக்கு ரூ.64.36 இலட்சம் நிதி உதவிகள் மூலம் சுயதொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

மதி சிறகுகள் தொழில் மையம் மதுரை மாவட்டத்தில் மகளிர் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தொழில் திட்டம் தயாரித்தல், ஆலோசனை வழங்குதல், உரிமம் பெற்று தருதல், சந்தை இணைப்பு தொடர்பான தகவல்கள் தெரிவித்தல், தொழில் வளர்ச்சிக்காகவும், பல்வேறு வசதிகளுக்காகவும்
மற்றும் பிற துறைகள் மூலம் நிதி இணைப்பு பெற்றுத் தருதல் போன்ற செயல்பாடுகளுடன்

வணிகதிட்டம் தயாரித்தல், Cibil Score சரிபார்த்தல், MSME, FSSAI சான்றிதழ், PAN Card பதிவு செய்தல் பிற துறை நிறுவனங்களுடன் வங்கி கடன் இணைப்பு, சந்தை குறித்த தகவல்கள், சந்தைப்படுத்துதல் சேவைகள் வழங்குதல் மற்றும் E-SEVAI மூலம் சேவைகளை மதி சிறகுகள் தொழில் மையம் என்ற பெயரில் பூமாலை வணிக வளாகத்தில் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

நான்கு ஒன்றியங்களில் 137 ஊராட்சிகளில் இதுவரை 24,117 தொழில் முனைவோர்கள் மற்றும் பயனாளிகளுக்கு ரூ.39.93 கோடி மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்று வாழ்ந்து காட்டுவோம் திட்டம் பல தொழில் முனைவோர்களை உருவாக்கி மக்களின் பொருளாதார நிலையிளை மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, உதவி ஆட்சியர்  (பயிற்சி) வைஷ்ணவி பால், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் (மாவட்ட திட்ட அலுவலர்) வி.சுந்தர பாண்டியன், வேளாண் வணிக துணை இயக்குநர் மேரி, திருமோகூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.பி.ஆர். அண்ணாமலை உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top