Close
டிசம்பர் 12, 2024 5:42 மணி

சாத்தனூர் அணையில் தண்ணீர் திறப்பு: 4 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சாத்தனூர் அணை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

மேலும் தொடர் மழை காரணமாக சாத்தனூர் அணையில் தற்பொழுது நீர்வரத்து 8,000 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து 13,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் குறித்து ஆறாவது முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சாத்தனூர் அணையில் தண்ணீர் வரத்திற்கு ஏற்ப படிப்படியாக தண்ணீர் வெளியேற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் தென்பண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்படுத்தின.

இதேபோல் கோமுகி அணையிலிருந்து 3000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த ஆற்றின் கரையோரம் வசித்து வரும் பொது மக்களுக்கும் அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தற்பொழுது பெய்து வரும் கனமழையால் திறந்து விடப்பட்ட தண்ணீரால் தென்பெண்ணையாற்றில் கரையோரங்களில் உள்ள கிராமங்களில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆற்றங்கரையோரம் உள்ள தென்பெண்ணையாறு சாலை, ஓம் சக்தி நகர், திடீர் குப்பம், குண்டு உப்பலவாடி, கண்டகாடு, நானமேடு, தாழங்குடா உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top