Close
டிசம்பர் 19, 2024 1:58 காலை

தேனி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

தேனி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முழுவதும் மழை பெய்தது.

தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சுமாராக பெய்தது. வடகிழக்கு பருவமழை பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. வடமாவட்டங்கள் அனைத்தும் தண்ணீரில் மிதக்கும் போது, தேனி மாவட்டத்தில் மிதமான பருவநிலை மட்டும் நிலவியது.

ஆனால் மழை கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட மாவட்டத்தின் அனைத்து அணைகளும், ஏரிகளும் குறைந்த அளவு தண்ணீருடன் தான் காணப்பட்டன. 142 அடி தண்ணீர் தேங்கி நிற்கும் முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் 119 அடியாக இருந்தது. 71 அடி இருக்க வேண்டிய வைகை அணை நீர் மட்டம் 49 அடியில் இருந்தது.

இந்நிலையில் கடந்த வாரமே வானிலை ஆய்வு மையம் ஒரு நல்ல செய்தி வெளியிட்டது. இந்த முறை வங்க கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மூலம், தேனி மாவட்டத்தில் மழை பெய்யும் என தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது முதல் தேனி மாவட்ட விவசாயிகள் டிசம்பர் 12, 13ம் தேதிகள் எப்போது வரும் என காத்திருந்தனர். விவசாயிகளின் எதிர்ப்பு வீணாகவில்லை. டிசம்பர் மாதம் 11ம் தேதி இரவே மழைக்கான அறிகுறிகள் தென்பட்டன.

டிசம்பர் 12ம் தேதி மழையுடன் தொடங்கினாலும், பகல் முழுக்க மழை கிடைக்கவில்லை. ஆனால் இரவு தொடங்கிய மழை விடிய, விடிய பெய்து விவசாயிகளை குளிர்வித்தது. தற்போது மழை குறைந்தாலும், பருவநிலை மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறது. இன்று முழுக்க மழை கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை 6 மணி நிலவரப்படி பெய்த மழை விவரம்: ஆண்டிபட்டியில் 42.2 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 26 மி.மீ., வீரபாண்டியில் 30.4 மி.மீ., பெரியகுளத்தில் 54.2 மி.மீ., மஞ்சளாறில் 31 மி.மீ., சோத்துப்பாறையில் 24 மி.மீ., வைகை அணையில் 39 மி.மீ., போடியில் 29.4 மி.மீ., உத்தமபாளையத்தில் 18.4 மி.மீ., கூடலுாரில் 33.6 மி.மீ., சண்முகாநதியில் 51 மி.மீ., மழை பெய்தது. பெரியாறு அணையில் 101 மி.மீ., தேக்கடியில் 108.20 மி.மீ., மழை பெய்தது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 45.2 மி.மீ., ஆக பதிவானது.

இன்று பகல் முழுக்க மழைக்கான வாய்ப்புகள் உள்ளது. வரும் 15ம் தேதி மீண்டும் ஒரு புயல் வங்க கடலில் உருவாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தேனி மாவட்டத்தில் இனிமேல் இந்த சீசன் முடியும் வரை மழை கிடைக்கும் என விவசாயிகள் நம்புகின்றனர். தற்போதைய நிலவரப்படி பெரியாறு அணை நீர் மட்டம் 121 அடியை எட்டி உள்ளது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 3200 கனஅடியை எட்டி உள்ளது.

அணைப்பகுதியில் மழை தொடர்வதால், இன்னும் நீர் வரத்து அதிகரிக்கும். வைகை அணை நீர் மட்டம் 50 அடியை எட்டி உள்ளது. அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 1100 கனஅடியாக உள்ளது. இன்னும் நீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

இதேபோல் மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை, சண்முகாநதி அணைகளிலும் நீர் வரத்து சிறிது அதிகரித்துள்ளது. பெரியாறு, வைகை, கொட்டகுடி, வராகநதியில் யாரும் குளிக்க வேண்டாம். சுருளி அருவி, அணைக்கரைப்பட்டி அணை, கும்பக்கரை அணைகளில் யாரும் குளிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top