சிவகங்கை.
சிவகங்கை மாவட்டம்,சிவகங்கை வட்டத்திற்குட்பட்ட சாலூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 139 பயனாளிகளுக்கு ரூ.36.91 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வட்டம், ஒக்கூர் உள்வட்டம், சாலூர் கிராமத்தில், நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன் முன்னிலையில் பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை, வழங்கி தெரிவிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அனைத்துத்தரப்பு மக்களையும் பயன்பெறச் செய்து வருகிறார்கள். பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில், அரசின் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கிடும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தினை தேர்ந்தெடுத்து,
அதிலுள்ள கடைக்கோடி கிராமத்திற்கு சென்று, பொதுமக்களின் கோரிக்கைகளைப் பெற்று, தகுதியுடைய பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கென ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு முகாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், இன்றையதினம் சிவகங்கை வட்டத்திற்குட்பட்ட சாலூர் கிராமத்தில் நடைபெற்று கொண்டிருக்கும், இம்மக்கள் தொடர்பு முகாமின் மூலம் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் விரிவாக மக்களுக்கு எடுத்துரைத்துள்ளனர்.
இம்மக்கள் தொடர்பு முகாமினை முன்னிட்டு, முன்னதாக பொதுமக்களின் தேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பாக கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அதில் தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, அம்மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், அதன் பயன்களும் இன்றைய தினம் வழங்கப்படவுள்ளன.
இன்றைய தினமும் இம்முகாமின் வாயிலாக பெறப்படும் கோரிக்கை மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீதும் உடன் நடவடிக்கைகள் மேற்கொண்டு உரிய பலன்கள் வழங்கப்படும். மேலும், இவ்வூராட்சியை பொறுத்த வரையில், இப்பகுதியில் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிவருவது மட்டுமன்றி, அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இதுதவிர, தங்களது கிராமத்தினை மாதிரி கிரமமாக உருவெடுத்திடும் பொருட்டு, அனைத்திலும் சிறந்து விளங்கிடும் வகையில் கிராம மக்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இருந்திட வேண்டும். கிராமங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறுதொழில்களும் அடிப்படையாக அமைகின்றன. இளைஞர்கள் தொழில் தொடங்கி பிறருக்கு வேலைவாய்ப்பினை வழங்கிடுவதற்கு முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
அதற்கான அரசின் மானியத்துடன் கூடிய திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை பெறுவதற்கு துறை சார்ந்த அலுவலகங்களை முறையாக அணுகி, அதன் வாயிலாக தாங்களும் பயன்பெற்று கிராமங்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்திட வேண்டும்.
மேலும், இப்பகுதியில் காய்கறி சாகுபடியினை விவசாயிகள் சிறந்த முறையில் மேற்கொண்டு வருவதால், அவை அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு அடிப்படையாக அமைகிறது. அதனை மேம்படுத்திடும் பொருட்டு, அரசின் திட்டங்கள் வாயிலாக உரிய நடவடிக்கைகள் துறை ரீதியாக மேற்கொள்ளப்படும். மேலும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் உயர்கல்வியை ஊக்குவித்து, அவர்களுக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.
உயர்கல்விக்கென அரசால் தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம் போன்ற திட்டங்கள் வாயிலாக மாதந்தோறும் ரூ.1,000/- உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர, பல்வேறு கல்விக்கடனுதவிகளும் வழங்கிட அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், குழந்தை திருமணங்களை தடுக்கும் வகையில், அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கும் கிராம பொதுமக்கள் உறுதுணையாக இருந்திட வேண்டும்.
இக்கிராமத்தில், பல்வேறு மேம்பாடு வசதிகள் மற்றும் தங்களின் தேடைவகள் குறித்து பெறப்பட்டுள்ள மனுக்களில், தகுதியுடைய மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளப்பட்டு, அதற்குரிய பலன்கள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக, இம்மக்கள் தொடர்பு முகாமில் அரசின் பல்வேறு துறைகள் ரீதியாக அமைக்கப்பட்டிருந்த செயல்விளக்க கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.