திட்டக்குடி அருகே கோனூரில் ஏரி நிரம்பி குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் வெளியே வர முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த உள்ள கோனூரில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவு உள்ள பெரிய ஏரி உள்ளது. இதன்மூலம் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விலை நிலங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் கடந்த சில ஆண்டுகளாக ஏரியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்து வந்தது.
தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையினால் ஏரி முழு கொள்ளளவையும் எட்டியுள்ளது. தொடர்ந்து நேற்றிரவு பெய்த தொடர் கன மழையினால் ஏரியில் நீர் நிரம்பி குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
வீடுகள் மற்றும் தெருக்கள் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளதால் அப்பகுதியை விட்டு பொதுமக்கள் வெளியேற முடியாமல் முடங்கி உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற திட்டக்குடி வருவாய் துறையினர் 150க்கும் மேற்பட்ட மக்களை அங்கிருந்து வெளியேற்றி, சமுதாயக்கூடத்தில் தங்க வைத்து நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.