Close
டிசம்பர் 15, 2024 1:47 மணி

நாடகமாடுகிறது கேரளா! நம்ப வேண்டாம்: பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர்

பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுயிக் பாலசிங்கம்.

கேரள அரசு நாடகம் ஆடுகிறது. நம்ப வேண்டாம் என பெரியாறு விவசாயிகள் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுயிக் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

1984ம் ஆண்டு ஈ.வெ.ரா.,விற்கு வைக்கத்தில் நினைவிடம் கட்டுவதற்காக, கேரள மாநில அரசு ஒதுக்கிய இடத்தில், 8.4 கோடி ரூபாய் செலவில், நினைவிடம், நூலகம், சிறுவர் பூங்கா உள்ளிட்டவைகளை தமிழக பொதுப்பணித்துறை சார்பில் கட்டியதோடு, திறந்து வைக்கவும் தமிழக முதல்வர் வைக்கம் சென்றிருந்தார்.

இந்த சமயத்தில்தான், கடந்த 4 ம் தேதி, முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளுக்காக தமிழக பொதுப்பணித்துறையால் கொண்டு செல்லப்பட்ட இரண்டு எம்.சாண்ட் ஏற்றிய லாரிகள், பெரியாறு புலிகள் காப்பக அதிகாரிகளால் வல்லக்கடவு சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டது.

வண்டிகளை பெரியாறு அணைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து போராடி வந்த நிலையில், தமிழக சட்டமன்றத்தில் அது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது பெரியார் நினைவிட திறப்புக்காக கேரளா செல்லும் முதல்வர், அது குறித்து கேரள முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், கேரளாவில் பதற்றம் தொற்றிக் கொண்டது.

புதன்கிழமை மதியம் நெடும்பசேரி விமான நிலையத்திற்கு சென்று சேர்ந்த நம் முதல்வர், அங்கிருந்து நேராக கோட்டயம் அருகே  வேம்பநாடு காயலில் அமைந்திருக்கும், உலகப் புகழ்பெற்ற லேக் ரிசார்ட்டிற்கு சென்றார்.

அன்று இரவு அந்த ரிசார்ட்டில் நம் முதல்வரோடு, கேரள மாநில முதல்வர் பினராயி தங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

இரண்டு மாநில முதல்வர்களும் ஒரே விடுதியில் தங்கும் சூழ்நிலை உருவானதால், முல்லைப் பெரியாறு அணை குறித்து இருவரும் பேசப்போகிறார்கள் என்கிற தகவல் கேரளா முழுவதும் காட்டுத் தீயாகப் பரவியது.

கேரள மாநில முதல்வரிடம் என்ன பேச வேண்டும் என்று தமிழக அரசு பட்டியலிட்டு வைத்திருந்த பட்டியலில், முல்லைப் பெரியாறு தொடர்பான செய்தியும் இருந்த நிலையில், இருவருடைய சந்திப்பும் கூடுதல் கவனம் பெற்றது.

ஆனால் சந்திப்பிற்கு முன்னதாகவே சில ஆச்சரியங்கள் அங்கு நடந்தேறியது. அணையின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே மராமத்து பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படும் என்கிற நிலைப்பாட்டில் இருந்து கேரளா சற்று பின்வாங்கி இருந்தது.

லேக் ரிசார்ட்டில் நம்முடைய முதல்வரை சந்திப்பதற்கு முன்பே, முல்லைப் பெரியாறு தொடர்பான உத்தரவு, கேரளா மாநில முதலமைச்சர் அலுவலகத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதாவது தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ வேண்டுகோளின் படி முல்லைப் பெரியாறு அணையில், ஏழு குறிப்பிட்ட பணிகளை மட்டும் கடுமையான நிபந்தனைகளுடன் செயல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

புதிய கட்டுமானங்கள் எதையும் தமிழ்நாடு அரசு செய்யக்கூடாது. கட்டுமான பொருட்களை வல்லக்கடவு சோதனை சாவடி வழியாக கொண்டு செல்லும்போது, வனச் சட்டங்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளுடன் அனுமதிகளை  தமிழகத்திற்கு வழங்கிய பிறகு, கேரள மாநில முதல்வர் லேக் ரிசார்ட்டில் நம்முடைய முதல்வரை சந்தித்திருக்கிறார்.

அந்தச் சந்திப்பு 15 நிமிடங்களில் நிறைவு பெற்றதாக சொல்கிறார்கள் கேரள பத்திரிக்கையாளர்கள். முறைப்படி கோரிக்கை எழுப்புவதற்கு முன்னதாகவே, பராமரிப்பு பணிகளை கேரளா அனுமதித்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

ஆனால் தமிழக முதல்வரை வரவேற்பதற்கான கமிட்டியில், கேரள தேவசம்போர்டு அமைச்சர் வாசவன் மற்றும் பினராயியின் நிழலுமான அமைச்சர் சாஜி செரியனை தவிர, அம்மாநில நீர் பாசன துறை அமைச்சர் ரோசி அகஸ்டினையோ அல்லது வனத்துறை அமைச்சர் ஏ கே சசிந்திரனையோ கேரள முதல்வர் தன்னுடன் இருப்பதற்கு ஏன் அனுமதிக்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக நம்முடைய முதல்வர், கேரள முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று சட்டமன்றத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்த அன்று மாலையே, கேரள மாநில அரசு தற்காலிக அனுமதியை வழங்கியது எதிர்பாராத விஷயம் தான்.

குமரகத்தில் உள்ள புகழ்பெற்ற லேக் ரிசார்ட், பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கான தளம் என்கிற நிலையில், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக எடுக்கப்பட்ட இந்த முடிவும், அரசியல் பின்னணியோடு எடுக்கப்பட்டு இருக்கலாமோ என்று சந்தேகிக்க தோன்றுகிறது.

இதன்படி மராமத்து பணிகளை எத்தனை நாட்கள் மேற்கொள்ளலாம்? எத்தனை வண்டிகளில் எம்.சாண்டுகளைக் கொண்டு செல்லலாம்? இந்த அனுமதிக்கு பிறகு இரண்டொரு மாதங்களில் மறுபடியும் பராமரிப்பு பணி என்று வந்தால் அப்போது யாரிடம் சென்று அனுமதி வாங்குவது? என்று நமக்குத் தெரியவில்லை.

முல்லைப் பெரியாறு அணை குறித்து முறைப்படி பேச்சுவார்த்தை நடத்தி இருந்தால், தற்காலிக தீர்வை, நிரந்தர தீர்வாக மாற்றி இருக்க முடியும். ஆனால் குமரகத்தில் இரு மாநில முதல்வர்களும் சந்தித்துக் கொண்டது, அலுவல் பட்டியலில் இல்லாத ஒன்றாக இருப்பது தான் நமக்கான சந்தேகம்.

மேலாக கேரள மாநில அரசு  பிறப்பித்திருக்கும் உத்தரவில், மராமத்து பணிகள் நடைபெறும் போது, இரண்டு கேரள பொறியாளர்கள் கண்காணிப்பில் அது நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் திமுக, வின் ஒத்துழைப்பு இல்லாமல், தேசிய அரசியலில் வெறும் ஐந்து எம்பிக்களை மட்டும் வைத்துக்கொண்டு, எதுவும் செய்ய முடியாது என்பதால், பொலிட்பீரோ உத்தரவின் அடிப்படையில் தற்காலிகமாக பினராயி பின்வாங்கி இருப்பதைப் போல் தான் தெரிகிறது.

நிலைமை சுமூகமாக விட்டால், தேனி திண்டுக்கல் மதுரை  சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பெரிய கொந்தளிப்பு ஏற்படும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெரியார் ஈ.வெ.ராவை தூக்கிப் பிடிக்கும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் ஆகிய இருவரும், மிக எளிதாக வண்டிப்பெரியாறு, பீர்மேடு, முண்டக்காயம், கோட்டயம் சென்று அங்கிருந்து வைக்கத்திற்கு சென்று நிகழ்வில் பங்கேற்று இருக்கலாம்.

ஆனால் அங்கு செல்வதை கவனமாக தவிர்த்ததற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். இவ்வாறு கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top