திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையால் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து தொடர்ந்து வினாடிக்கு 16,500 கன அடி நீர் வந்து கொண்டு இருப்பதால் பூண்டி ஏரியின் மொத்த உயரமான 35 அடியில் தற்போது 34.99 அடியாக எட்டி உள்ளது.
ஏரியின் மொத்த கொள்ளளவான 3,231மில்லியன் கன அடியில் தற்போது 3,204 மில்லியன் கன அடியாக நிரம்பி இருக்கிறது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரிக்கு வரும் 16,500 கன அடியை அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரமாக வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பூண்டி ஏரியை நேரில் ஆய்வு செய்து வருகிறார். ஏரிக்கு நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகிறார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடன் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், அன்பரசன், மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ் சந்திரன்,உடன் இருந்தனர்.