Close
டிசம்பர் 18, 2024 4:16 மணி

வெயிலும், மழையும் பக்குவமாக பாதுகாத்த தேனி

2024ம் ஆண்டில் தமிழகத்தை புரட்டி போட்ட வெயிலும், மழையும் தேனி மாவட்டத்தை பக்குவமாக பாதுகாத்தது.

தமிழகத்திற்கு 2024ம் ஆண்டு இயற்கை பெரும் சோதனையை கொடுத்தது. வட மாவட்டங்களையும், தென் மாவட்டங்களையும் மழையும், வெயிலும் புரட்டிப்போட்டன. மழை என்றால் இதுவரை இல்லாத அளவு பெய்து, மழைநீர் பல நகரங்களை மட்டுமல்ல. மாவட்டங்களையே மூழ்கடித்தது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவாரூர், துாத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் இந்த ஆண்டில் இருமுறை பெருமளவில் வெள்ளப்பாதிப்பில் சிக்கி பரிதவித்து போயினர். மக்களே மிரண்டு போகும் அளவுக்கு மழை பெய்தது.

மழைக்கான எச்சரிக்கை வந்ததும் ஆளும் தி.மு.க., அரசுக்கு ‘திக், திக்’ என்றாகி விடும். அந்த அளவு மி.மீ.,ல் மழையை அளந்த காலமெல்லாம் மாறிப்போய், எத்தனை சென்டி மீட்டர் என கேட்கும் அளவுக்கு தான் நிலைமை இருந்தது. இப்படி மழை தமிழகத்தை புரட்டி போட்ட நிலையில், வெயிலும் தனது பங்குக்கு வாட்டி வதைத்தது.

குறிப்பாக ஈரோடு, பரமத்தி வேலுார், வேலுார், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெயில் 112 டிகிரி பாரன்ஹீட்டை எட்டியது. மதுரை, நெல்லை, துாத்துக்குடி, சிவகங்கை மாவட்டங்களில் கூட வெயில் 106 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. மக்கள் வெயிலில் வெந்து தணிந்தனர். இதேபோல் பல மாவட்டங்கள் இயற்கையின் நெருக்கடியில் சிக்கி தவித்தன. இப்படி வெயிலும் மழையும் தமிழகத்தை புரட்டி போட்ட நிலையில், தேனி மாவட்டம் மட்டும் இயற்கையோடு இணைந்து மிகவும் பாதுகாப்பாக இருந்தது. தேனி மாவட்டம் ஒரு பள்ளத்தாக்கு மாவட்டம். அதாவது மாவட்டத்தின் முழு நிலப்பரப்பும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தேனி மாவட்டமும் மலையடிவாரத்தில் தான் அமைந்திருக்கும். அந்த அளவு இயற்கையோடு பின்னி பிணைந்த மாவட்டம். அதேநேரம் தண்ணீர் வழிந்தோடும் வசதிகளை அதிகம் கொண்ட மாவட்டமும் ஆகும்.

இருப்பினும் தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு  மழை குறைவும் இல்லை. அதிகமும் இல்லை. தேவையான அளவு மழை நிதானமாகவே பெய்தது. ஒருமுறை கூட மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் மட்டும் 100 மி.மீ., மழை பதிவானது. இதர பகுதிகளில் சராசரி மழையளவு 45 மி.மீ., என்ற அளவிலேயே இருந்தது. இதனால் மழையால் தேனி மாவட்டத்தில் எந்த பாதிப்பும் இல்லை.

அதேபோல் வெயிலும் தேனி மாவட்ட மக்களை வதைக்கவில்லை. 2024ம் ஆண்டில் தேனி மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி பாரன்ஹீட் வரை தான் சென்றது. அதுவும் ஓரிரு இடங்களில் தான். அதாவது மாவட்டத்தின் வெப்பநிலை கோடை காலத்தில் கூட எந்த இடத்திலும் 100 டிகிரியை எட்டக்கூட இல்லை. அந்த அளவு இயற்கை 2024ம் ஆண்டில் தேனி மாவட்டத்தினை பாதுகாத்தது. அதனை விட சிறப்பு, தேனி மாவட்டத்தில் மிதமான பருவநிலை, சில்லென்ற காற்று, நீர் வளம் என அனைத்தும் மிக, மிக சிறப்பாகவே இருந்தது.

அதாவது போதுமான வெயில், போதுமான மழை, போதுமான நிலத்தடி நீர் மட்டம், சிறப்பான செழிப்பான விவசாயம், நல்ல தொழில் வாய்ப்பு என இயற்கை எந்த ஒரு வாழ்வியல் முறைக்கும் கேடு விளைவிக்கவில்லை.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம், தேனி மாவட்ட மக்கள் தமிழகத்தின் பிற மாவட்டங்களோடு ஒப்பிடுகையில், இயற்கையை பெரிய அளவில் அழிக்கவில்லை. தேனி மாவட்டத்திலும் இயற்கையை அழிக்கும் பணிகளில் பல சமூக விரோதிகள் ஈடுபட்டு தான் உள்ளனர்.

ஆனால் முடிந்த அளவு மாவட்ட நிர்வாகமும், தேனி மாவட்ட போலீஸ் நிர்வாகமும் இயற்கை பாதுகாப்பதில் பெரிய அளவில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஆக எப்படி பார்த்தாலும், பிற மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் தேனி  மாவட்டத்தில் வாழும் மக்களும் விவசாயிகளும் கொடுத்து வைத்தவர்கள் தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top