கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆற்றில் மிதந்த பச்சிளம் குழந்தைகள் சடலத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைகேட்ப நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மனு அளிப்பதற்காக ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்திருந்தனர்.
இந்நிலையில் அலுவலகம் நேர் எதிரே உள்ள தென்பெண்ணையாற்றில் தடுப்பணை அருகே ஒரு கட்டைப் பையில் துணி சுற்றிய நிலையில் பிறந்து சில நாட்களே ஆன இரண்டு குழந்தைகள் சடலங்களாக மிதந்தன. இதனால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு குழந்தைகளின் சடலங்களை கைப்பற்றி குடல் கூராய்க்காக கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தைகள் ஆற்றில் சடலமாக மிதந்தது குறித்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. இரண்டும் பெண் குழந்தைகள் அவற்றின் கைகளில் கடலூர் மகப்பேறு அரசு மருத்துவமனையில் கட்டப்பட்ட அடையாள பட்டைகள் இருந்தன.
கடலூர் அரசு மருத்துவமனை பதிவேடுகளை சோதனை செய்ததில் இந்த குழந்தைகள் பண்ருட்டி காடாம்புலியூர் தெற்கு மேல் மாம்பட்டை சேர்ந்த பிரபாகரன் மனைவி ஜெயப்பிரியாவிற்கு பிறந்த இரட்டை குழந்தைகள் என்று தெரிய வந்தது.
கடந்த 14ம் தேதி, அதிகாலை 12.35 மணிக்கு பிறந்து, 15ம் தேதி மாலை 7.30க்கு ஒரு குழந்தையும், இரவு 9.50 க்கு ஒரு குழந்தையும் இறந்துள்ளது. இறந்த குழந்தைகளை முறைப்படியாக கடலூர் அரசு மருத்துவமனையில் பெற்றோர் வசம் ஒப்படைத்துள்ளனர்.
அந்தக் குழந்தைகளை உறவினர்கள் தென்பெண்ணையாற்றில் வீசி விட்டுச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் இது தொடர்பாக ரெட்டிச்சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் விசாரணை செய்து வருகின்றனர்.