சேலத்தில் சித்த மருத்துவப் பிரிவு கூடுதல் கட்டடத்திற்கான பணியினைத் அமைச்சர் இராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.
சேலம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிய சித்த மருத்துவப் பிரிவு கூடுதல் கட்டடத்திற்கான பணியினைத் நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேன்மேலும் மேம்படுத்தும் வகையில் புதிய திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார்.
குறிப்பாக, கலைஞரின் வருமுன் காப்போம், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பருவகால நோய்த்தொற்றுகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாத்திடும் வகையில் சித்த மருத்துவப் பிரிவுகள் வாயிலாக பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெங்கு, சிக்கன்குனியா மற்றும் பிற நோய் பரவல்களை தடுக்கவும் சிகிச்சையளிக்கவும் சித்த மருத்துவ முறை முக்கிய பங்காற்றுகிறது.
இந்த பரவல்களை தடுப்பதற்கும், சிகிச்சையளிக்கவும் சித்த மருத்துவப் பிரிவுகள் வாயிலாக நோய் எதிர்ப்பு மூலிகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இச்சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவுகள் அமையப் பெற்றுள்ள அனைத்து இடங்களிலும் மூலிகைச் செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அனைத்து இடங்களிலும் நாள்தோறும் நிலவேம்பு மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சேலம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் சித்த மருத்துவ யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கான கூடுதல் கட்டடப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் சித்த மருத்துவப் பிரிவு மூலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 70 இடங்களில் சித்த மருத்துவ மையங்கள் செயல்பட்டு வருகிறது.
இதுதவிர, கருப்பூரில் யுனானி மையமும், பனமரத்துப்பட்டி, சர்க்கார் கொல்லப்பட்டி, ஏத்தாப்பூர் மற்றும் அரசிராமணி ஆகிய 4 இடங்களில் ஆயுர்வேத மருத்துவ மையமும் மற்றும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, எடப்பாடி, ஆத்தூர் அரசு மருத்துவமனைகள், வடுகப்பட்டி மற்றும் மல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இடங்களில் ஹோமியோபதி மையங்களும் செயல்பட்டு வருகிறது.
நாள்தோறும் இம்மருத்துவப் பிரிவுகள் மூலம் தலா ஒரு மையத்திற்கு சராசரியாக 80 முதல் 120 பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். அதேபோன்று, கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது.
சித்த மருத்துவம் மற்றும் ஓமியோபதி மூலம் பொதுமக்களுக்கு சுகாதார சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று ஆரம்ப சுகாதார மையங்கள் வழியாக பள்ளி மாணவர்களுக்கு உணவுப்பழக்கங்கள், யோகா ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் தேவிமீனாள், மருத்துவக் கண்காணிப்பாளர் ராஜ்குமார், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் இராமச்சந்திரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.