Close
டிசம்பர் 19, 2024 6:20 காலை

இலை சுருட்டு புழு பாதிப்பிலிருந்து நெல் பயிரை பாதுகாப்பது எப்படி?

இலை சுருட்டுப் புழு பாதிப்பு குறித்து பயிர்களை ஆய்வு செய்யும் மதுக்கூர் உதவி வேளாண் இயக்குனர் திலகவதி

இலை சுருட்டு புழு பாதிப்பிலிருந்து நெல் பயிரை பாதுகாப்பது குறித்து மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி விளக்கம் அளித்துள்ளார்.

மதுக்கூர் வட்டாரத்தில் தற்போது சம்பா நெற்பயிர் 4100 எக்டர் பரப்பில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது நெல்பயிர் ஆனது வளர்ச்சி பருவம் முதல் பூக்கும்நிலை வரை காணப்படுகிறது. தற்போது பெய்கின்ற திடீர் மழை மற்றும் மாலைநேர அதிக ஈரப்பதம் ஆகிய காரணங்களினால் வளர்ச்சி பருவம் மற்றும் பூக்கும் நிலையில் உள்ள நெல் பயிர்களில் இலைசுருட்டு புழுக்களின் தாக்குதல் அதிக அளவில் காணப்படுகிறது.

வேளாண் இணை இயக்குனர் தஞ்சாவூர் அவர்களின் அறிவுரைப்படி நிரந்தர பூச்சி நோய் கண்காணிப்பு வயல்கள் மதுக்கூர் வட்டாரத்தில் தளிக்கோட்டை மற்றும் கீழக்குறிச்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பரவலாக பூச்சி மற்றும் நோயின் தாக்குதல் காணப்படுவதை தொடர்ந்து, வேளாண் உதவி இயக்குனர் திலகவதி மதுக்கூர் வட்டாரத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அவர் பெரிய கோட்டை புளியக்குடி சொக்கநாவூர் கன்னியாகுறிச்சி ஒலயகுன்னம் கீழக்குறிச்சி அண்டமி உட்பட்ட கிராமங்களில் வயலில் ஆய்வு மேற்கொண்டு நெல் பயிர்களின் பல்வேறு நிலைகள் மற்றும் அவற்றின் பூச்சி நோய் சத்து குறைபாடு போன்றவை பற்றி ஆய்வு செய்தார். மேற்கண்ட பகுதியில் உள்ள நெல் பயிரில் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி, வேளாண்மை அலுவலர்சரவணன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் முருகேஷ்,தினேஷ் உள்ளிட்டோருடன் ஏ டிடி 51 சாகுபடி செய்துள்ள விவசாயி வயலில் ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பின் வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி கூறியதாவது :-

தற்போது நெல் பயிரில் வளர்ச்சி பருவத்தோடு மட்டுமின்றி பூக்கும் நிலையில் உள்ள பயிர்களிலும் நெல் இலைசுருட்டுபுழுவின் தாக்குதல் காணப்படுகிறது. வளர்ச்சி பருவத்தில் பொருளாதார சேதநிலையை 10 சதத்திற்கு மேலும் பூக்கும் நிலையில் 5 சதத்துக்கு மேல்அதிகரிக்கும் போதும் விவசாயிகள் உடனடியாக உரிய பயிர் பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இல்லாவிடில் மகசூல் குறைவு ஏற்படும்.

தட்டையான மஞ்சள் நிறத்தில் காணப்படும் இலை சுருட்டு புழுவின் முட்டைகள் பொறிந்தவுடன் பச்சையான நிறத்தில் ஒளி கசியும் தன்மையுடன் விளங்கும். இலைகளை நீளவாக்கில் மடித்து அதில் உள்ள பச்சையத்தை சுரண்டி உண்பதால் இலைகள் வெண்மையாக மாறி காய்ந்து விடும்.

நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் தெரியும். கூண்டு புழுக்கள் பத்து நாள் வரை இருக்கும். கூண்டு புழு பருவத்துக்கு செல்வதற்கு முன் இதனை கட்டுப்படுத்துவது மிக அவசியம். தாய் அந்து பூச்சி மஞ்சள் நிறத்தில் கருப்பு நிற அலைகள் உள்ள இறக்கைகளுடன் இருக்கும்.

பொருளாதார சேத நிலைக்கு கீழ் இருக்கும் பட்சத்தில் வயல் வரப்புகளை சுத்தம் செய்து விட வேண்டும். பாதிக்கப்பட்ட இலைகளை புழுக்களுடன் பிய்த்து அகற்றலாம். டிரைக்கோகிராமா ஒட்டுண்ணி அட்டைகளை ஏக்கருக்கு 2 சிசி வீதம் பத்து இடத்தில் வெட்டி இலையுடன் ஸ்டேபிள் செய்துவிட வேண்டும். ஒட்டுண்ணி அட்டைகளை நடவு செய்ததில் இருந்து ஐந்து ஆறு மற்றும் ஏழாவது வாரங்களில் வயலில் விட வேண்டும்.

இரண்டு சிசி என்பது நாற்பதாயிரம் ஒட்டுண்ணி முட்டைகளைக் கொண்டது. ஏக்கருக்கு 20 இடங்களில் கூட்டல் வடிவ குச்சிகளை வைப்பதன் மூலம் ரெட்டைவால் குருவி போன்ற பறவையினங்கள் அமர்ந்து புழு மற்றும் பூச்சிகளை உண்ணும்.

வேப்பங்கொட்டை சாறு அஞ்சு சதவீதம் அல்லது வேப்பெண்ணை 3 சதம் ஏக்கருக்கு 400 மில்லி வீதம் தெளித்தும் கட்டுப்படுத்தலாம். இலை சுருட்டு புழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது பாதுகாப்பான பூச்சிக்கொல்லி மருந்துளான குளோரோன்டிரானிலிப்ரோல் 18.5%ஏஸ்சி சிறந்த புழுக்கொல்லியாக செயல்பட்டு பயிரை பாதுகாப்பதோடு அதிகமகசூலுக்கும் உதவுகிறது.

40 நாள் வரை பயிரைக் காக்கும். மேலும் குளோரோன்டிரானிலிப்ரோல் 10 %எஸ்சி லேம்டா சைக்ளோத்ரின்5% கூட்டுக் கலவை ஏக்கருக்கு 100மிலி தெளிக்க முட்டை,புழு,தாய்பூச்சி மூன்றையும் கட்டுப்படுத்தும்.ப்ளுபென்டமைடு 480எஸ்சி ஏக்கருக்கு 20மிலி தெளிப்பதன் மூலம் இலை சுருட்டு புழுக்களின் நரம்பு மண்டலத்தை பாதித்து உடனடியாக உணவு உண்பதை நிறுத்துகின்றன.

எனவே பயிர் சேதத்தை உடனடியாக தவிர்க்கிறது. ஏக்கருக்கு மேல் கண்டவாறு பரிந்துரை செய்துள்ள ஏதேனும் ஒரு மருந்தினை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து கொண்டு கைத்தெளிப்பான் மூலம் ஒரு லிட்டர் கரைசலும் ஒன்பது லிட்டர் நீரும் கலந்து மாவுக்கு ஏழு டாங்கு வீதம் ஏக்கருக்கு 21 டேங்க் அடிப்பதன் மூலம் மிகச் சிறந்த முறையில் கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கூறியுள்ளார்.

விவசாயிகள் பயிரில் ஏதேனும் சேதம் ஏற்படின் உடனடியாக வேளாண் உதவி அலுவலரையோ, வேளாண் அலுவலரையோ, அல்லது வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி தேவையான மருந்தினை தேவையான நேரத்தில் தெளிப்பதன் மூலம் தேவையற்ற பூச்சிக்கொல்லி தெளிப்பதை தவிர்த்து செலவை குறைக்கலாம் என்று வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top