Close
ஏப்ரல் 2, 2025 3:29 காலை

இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டிய சாத்தியார் அணை..! விவசாயிகள் மகிழ்ச்சி..!

சாத்தியார் அணை -கோப்பு படம்

ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்த சாத்தியார் அணை – விவசாயிகள் மகிழ்ச்சி

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ளது சாத்தியார் அணை 29 அடி கொள்ளளவு கொண்டதாகும். மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரே அணை இதுவாகும்.

தற்போது பெய்துவரும் வடகிழக்கு பருவமழை, தொடர் கனமழை காரணமாக அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான திண்டுக்கல், சிறுமலை, செம்பட்டி கரடு, உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருந்து அதிகளவில் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் தற்போது அணை முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்து வருகிறது.

ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் பெய்த கனமழையால் அணை முழுவதுமாக நிரம்பி பாசன வசதிக்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக அணை நிரம்பி மறுகால் பாய்ந்து வருவதால் இந்த அணை மூலம் பாசன வசதி பெறும் 11 கிராம பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து அணை முழுவதுமாக நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. இதனால் இப்பகுதி பாசன வசதி பெறும் சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் இப்பகுதியில் இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்கு மானாவாரி பயிர் செய்ய தேவையான ஈரப்பதம் இருக்கும் என்பதாலும் விவசாயம் செய்ய தேவையான நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதாலும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது இப்பகுதியில் கரும்பு மற்றும் தானிய பயிர்கள் மட்டுமே விவசாயம் செய்து வந்த நிலையில் தொடர்ந்து அணை நிரம்பி மறுகால் பாய்ந்து வருவதால் இப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நெல் நடவு பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் ஓரிரு தினங்களில் மீண்டும் அணையில் இருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறந்து விடப்படலாம் என எதிர்பாரக்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top