Close
டிசம்பர் 18, 2024 6:51 மணி

ஆட்சியர் உத்தரவு காற்றில் பறக்குது..!

பஞ்சாயத்து தலைவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கை தொடங்கிவைத்து பேசிய மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் கணவர்கள் பங்கேற்று அதிகாரியிடம் கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான வன்கொடுமை தடுப்பு சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட அலுவலர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது.

இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்காக செயல்படுத்தப்படும் நல திட்டங்கள் மற்றும் வன்கொடுமை தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு துறை அலுவலர்களும் உரையாற்றினர்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, அரசு நலத்திட்டங்கள் மற்றும் வன்கொடுமை தடுப்பு குறித்த விழிப்புணர்வுகளை ஊராட்சி மன்ற தலைவர்கள் அறிந்து கொண்டால் அந்த கிராமமே முன்மாதிரி கிராமமாக இருக்கும் என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தாட்கோ மற்றும் முன்னோடி வங்கி மேலாளர்கள் உள்ளிட்டோர் இதில் உரையாற்றினர்.

கடந்த காலங்களில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அனைத்து அரசு கூட்டங்களிலும் ஊராட்சி மன்ற பெண் தலைவர்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும் எனவும் அனைத்து திட்டங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என கூறி வந்த நிலையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர்களின் கணவர்கள் கலந்து கொண்டு அதிகாரிகளிடையே திட்டங்கள் குறித்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மட்டும் இருந்த நிலையில் அவரது கணவர்கள் கலந்து கொண்டு உரையாற்றியது ஆட்சியரின் உத்தரவு காற்றில் பறந்த நிலையைக் கண்டு அதிர்ச்சியை அளித்துள்ளது.

இது மட்டுமில்லாமல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சிகளில் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களை முப்பது சதவீதம் பேர் மட்டுமே பங்கேற்றதும் அதிர்ச்சி அளித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top