Close
டிசம்பர் 24, 2024 12:20 மணி

காஞ்சிபுரம் அருகே கல்லைக்கட்டி இளைஞர் கொலை..! போலீசார் தீவிர விசாரணை..!

இளைஞர் கொலை குறித்து மோப்ப நாயுடன் விசாரணை செய்யும் போலீசார்.

காஞ்சிபுரம் அருகே வெட்டுக் காயங்களுடன், உடலில் சிமெண்ட் கல் கட்டி குளத்தில் வீசிய நிலையில் இளைஞர் உடல் அழுகிய சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாலு செட்டி சத்திர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பாலு செட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புதுப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது சின்ன குளம். கடந்த 15 தினங்களுக்கு முன்பு பெய்த கன மழை காரணமாக குளம் முழுவதும் நிரம்பி இருந்த நிலையில் இன்று அப்பகுதி வழியாக சென்ற பொது மக்கள் சிலர் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதப்பதாக பாலு செட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பாலு செட்டி காவல்துறையினர் குளத்தில் மிதந்த சடலத்தை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு எடுத்தபோது உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு காயங்களும், இடுப்பு பகுதியில் சிமெண்ட் கல்லால் கட்டப்பட்டு வீசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்படி சடலத்தை உடற்கூறு ஆய்விற்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து பாலு செட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்தினை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) சாய் பிரனீத் ஆய்வு மேற்கொண்டும், மோப்பநாய் உதவியுடன் அப்பகுதி முழுவதும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெட்டு காயங்களுடன் , இடுப்பில் வீட்டு மனைகளை அளவீற்காக பயன்படுத்தப்படும் சிமெண்ட் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு வீசி இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top