சோழவந்தான்:
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் அருகே தத்துவமஸி அய்யப்பன் கோயில் உள்ளது.இந்த கோயிலில் வருடம் தோறும் நூற்றுக்கு மேற்பட்டஅய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று வருகின்றனர்.
இதே போல இந்த ஆண்டு கார்த்திகை 1-ஆம் தேதி விக்கிரமங்கலம் மற்றும் இப்பகுதி கிராமத்தில் உள்ள அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். இதில் புதிதாக மாலை அணிவித்து சபரிமலைக்கு செல்லக்கூடிய அய்யப்ப பக்தர்கள் கன்னிசாமி என்று அழைக்கப்படுவார்கள். இந்த கன்னி சாமிகளுக்கு கன்னி பூஜை,கூட்டுப் பிரார்த்தனை இங்கு நடைபெறுவது சிறப்பாக இருக்கும்.
இதே போல் இந்தாண்டு இங்குள்ள தத்துவமஸிஅய்யப்பன் கோயிலில் கன்னி பூஜை கூட்டுப் பிரார்த்தனை அன்னதானம் நடைபெற்றது. இந்த பூஜையை முன்னிட்டு காலை அய்யப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சோழவந்தான், தென்கரை உள்பட அய்யப்ப பக்தர்கள் பாக்கியம் குருநாதர், காத்தமுத்து குருநாதர் ஆகியோர் தலைமையில் பக்தி பஜனை பாடல் பாடினர்.
இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு புதிதாக சபரிமலைக்கு செல்லக்கூடிய அய்யப்ப பக்தர்கள் கன்னி சாமிகள் காலில் மஞ்சள் தண்ணீரால் கழுவி சந்தனம், குங்குமம் வைத்து வணங்கினர். பாதை பூஜை செய்த பக்தர்களுக்கு கன்னி சாமிகள் சந்தனம் குங்குமம் திலகமிட்டனர்.
இதைத்தொடர்ந்து குருநாதர் ஆர்.கே. சாமி தத்துவமஸி அய்யப்பனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜை கூட்டு பிரார்த்தனை மற்றும் அன்னதான நிகழ்ச்சியில் விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விக்கிரமங்கலம் ஊராட்சியில் இருந்து கூடுதலாக சுகாதார பணி செய்திருந்தனர். கன்னி பூஜை கூட்டுபிரார்த்தனை மற்றும் அன்னதான விழாவை விக்கிரமங்கலம் தத்துவமஸி அய்யப்பன் ஆலய பக்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து நடத்தினர்.