Close
டிசம்பர் 22, 2024 5:47 மணி

எதிர்க்கட்சி தலைவர் மீது தேவையில்லாத வழக்கு : எம்.பி. தங்கதமிழ்செல்வன்..!

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எம்.பி. தங்கதமிழ்செல்வனுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த கட்சியினர்.

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் காக்கப்படவில்லை . தேவையில்லாமல் எதிர்கட்சித் தலைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர் என்று உசிலம்பட்டியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறினார்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகர திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, 200க்கும் மேற்பட்ட சலவை தொழிலாளர்கள், முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்கள் இருவரும் சலவை மற்றும் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கூறும்போது,

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் காக்கப்படவில்லை. ஏனென்றால், ஆளும் பாஜகவிற்கு மெஜாரிட்டி இல்லை,. மைனாரிட்டி ஆட்சி நடக்கிறது. சட்டத்தை கண்மூடித்தனமாக கொண்டு வருகின்றனர். ஒரே நாடு ஒரே தேர்தல் இந்தியாவிற்கு சாத்தியமான தேர்தல் இல்லை. 18 கட்சிகள் இந்தியாவில் எதிர்க்கின்றன.

திமுக எதிர்த்து வாக்களித்துள்ளது. ஆனால், அதிமுக ஆதரித்து வாக்களித்துள்ளது. இதிலிருந்தே அதிமுக பாஜக மறைமுக கூட்டணியில் உள்ளனர் என்பது, இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டமே உணர்த்தியுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்திய எங்களை தான் காவல்துறை அதிகாரிகள் பிடித்து தள்ளினார்களே தவிர, நாங்கள் யாருடனும் மல்லுக்கட்டவில்லை. ஆனால் தேவையில்லாமல் எதிர்கட்சி தலைவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நிச்சயமாக மக்கள் இதற்கு உரிய தண்டனையை வரும் காலக்கட்டத்தில் கொடுப்பார்கள்.ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லை, நடக்கவும் நடக்காது. ஆளும் கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் உள்ளனர், எதிர்கட்சியை மதிக்கவில்லை. ஜனநாயக கடமை ஆற்றவே பாராளுமன்றம் செல்கிறோம், ஒட்டு போட்ட மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என பேசுகிறோம். இரண்டுமே செய்ய முடியாத அளவுக்கு பாஜக அரசு செய்து வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top