தமிழ்நாடு கருணீகர் சங்கத்தின் ஏழாவது கருணீகர் குல எழுச்சி மாநாடு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநிலத் தலைவர் டாக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
கருணீகர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் முத்து சுப்பிரமணியன், மாநிலப் பொருளாளர் ஆவடி சீனிவாசன், அமைப்புச் செயலாளர் திருநாவுக்கரசு, மாநில இணைச்செயலாளர் சிவகுரு, பதிப்பாளர் சுரேஷ் மற்றும் தலைமைச் சங்க நிர்வாகிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இம் மாநாட்டில் இருதய நோய் நிபுணர் டாக்டர் மகுடமுடி , இதய நோய்கள் பற்றியும், இதய நோய்கள் வருவதற்கான காரணங்களையும் அதைக் குணமாக்கும் வழி முறைகளையும், ஒளி, ஒலி திரை வழிக் காட்சி வழியே மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார்.
மேலும் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
1. கருணீகர் குலம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளதால் கல்வியில் மேம்பாடு அடைய கருணீகர் குலத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க அனைத்து கருணீகர் சங்கங்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று கருணீகர் குலத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க ஆவன செய்தல்.
2.கருணீகர் சமூகத்தினர் கல்வி தொழில், பொருளாதாரம், பண்பாடு ஆகிய துறைகளில் வளர்ச்சி காண உதவுதல்.
3.ஒவ்வொரு இனத்திற்கும் அவர்கள் குலத்திற்கென தனி கல்லூரிகள் உள்ளன. இதுவரை கருணீகர் குலத்திற்கென தனிக் கல்லூரி இல்லை. ஆகவே, அனைத்து கருணீகர் சங்கங்களும் ஒன்றிணைந்து நம் குலம் சார்ந்த பெருமக்களின் உதவிகளோடு கருணீகர் குலத்திற்கு என தனிக் கல்லூரி அமைத்தல்.
4.கருணீகர் சங்கங்கள் தனித்தனியாக அவரவர்கள் சார்ந்த இடங்களில் கருணீகர் குல மக்களுக்குத் தொண்டு செய்து வருவதுடன், கருணீகர் குல முன்னேற்றத்திற்கு தமிழ்நாடு அல்லாது மற்ற மாநிலங்களிலும் அனைத்து கருணீகர் சங்கங்களும் இணைந்து செயல்பட உறுதிப பூண்டல்.
5.கருணீகர் சங்கம் எந்த அரசியல் கட்சியும் சாராது அனைத்து அரசியல் கட்சிகளின் நன்மதிப்பை நாடி நம் குல மக்களுக்கு பணி செய்தல்.
6.நமது கருணீகர் குலத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு மருத்துவ வசதி செய்தல்.
7.தமிழ்நாடு கருணீகர் சங்கத்திற்கான சொந்தக் கட்டிடம் கட்டி அக்கட்டிடத்தில் அனைத்து கருணீகர் சங்கங்களின் விழாக்களை நடத்த ஆவன செய்ய வேண்டும்.
8.மாணவர்களுக்கான வருடாந்திர கல்வி ஊக்கத் தொகைக்காக பல தன்வந்தர்களை அணுகி கல்வி ஊக்கத்தொகை என பிரத்யேக நிதி ஒன்றை உருவாக்கி அதன் மூலம் எளிதாக உதவி வழங்கிட ஆவன செய்தல்.
9.கருணீகர் குல மகளிர் முன்னேற்றத்திற்காக ஒரு மாபெரும் சக்தியாக கருணீகர் மகளிர் அணி நிறுவன ஆவன செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இம்மாநாட்டில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.