Close
டிசம்பர் 23, 2024 10:23 காலை

தெருநாய் பிரச்னைக்கு தமிழக அரசு புதிய வரைவுக்கொள்கை..!

தெரு நாய்கள் -கோப்பு படம்

தெரு நாய் பிரச்னைகளுக்கு தீர்வுகாண புதிய வரைவு கொள்கையை தமிழக அரசு வகுத்துள்ளது.

தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் பொது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. பலர் நாய்க்கடியால் அவதிப்பட்டுள்ளனர். குழந்தைகளை விரட்டி விரட்டி கடிக்கும் நாய்களையும் நாம் பார்த்து அச்சத்தில் இருக்கிறோம். இந்த நிலையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண புதிய வரைவுக் கொள்கையை தமிழக அரசு வகுத்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் நாய்க்கடிக்கு உள்ளாகியுள்ளனர் என்று அரசின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த எண்ணிக்கை நாய்க்கடிக்கு முறையான சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்தவர்களை மட்டும் சார்ந்த எண்ணிக்கையாகும். சிகிச்சைக்கு வராதவர்களையும் கணக்கில் சேர்த்தால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

நாய்க்கடி மிகுந்த மாநிலங்களில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் சுமார் 13 லட்சம் நாய்கள் உள்ளது. இதில் நான்கரை லட்சம் நாய்கள் தெருவில் யாருடைய பராமரிப்பும் இல்லாமல் சுற்றித்திரியும் தெருநாய்கள் என்று புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. நாய்க்கடியால் ஏற்படும் உயிர்க்கொல்லி ரேபிஸ் நோய் மட்டுமல்லாமல் நாய்களால் சாலைகளில் ஏற்படும் விபத்துகளால் சில நேரங்களில் உயிரிழப்புகளும் சிலவேளைகளில் எலும்பு முறிவுகளும் ஏற்படுகின்றன. இதனால் கை, கால்களை இழந்தோரும் உள்ளனர்.

தெரு நாய்களுக்கான தமிழக அரசின் வரைவுக்கொள்கை 

தெரு நாய்களால் ஏற்படும் பெரும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை காப்பதற்கு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மாநில அரசின் திட்டக்குழு தனி வரைவுக் கொள்கையை வகுத்துள்ளது.

அந்த திட்டத்தின்படி தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்படுவதுடன், தடுப்பூசி போடப்பட்ட நாய்களை அடையாளம் காண தடுப்பூசி போடப்பட்ட நாய்களுக்கு அடையாளக் குறியீடு இடவும் இந்தகொள்கை வலியுறுத்தியுள்ளது.

அரசு கால்நடை மருத்துவமனைகளில் முடிந்தவரை அப்பகுதிகளில் உள்ள தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதுடன் நடமாடும் வாகனங்கள் மூலம் நாய்கள் மிகுந்த பகுதிகளுக்குச் சென்று கருத்தடை சிகிச்சை செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்வதற்கென்றே திறன் வாய்ந்த பணியாளர்களை உருவாக்குவதும் இத்திட்டத்தின் வெற்றிக்கு மிகவும் அவசியம் என்றும் அந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தெரு நாய்களுக்கு உணவளிக்கவும் தத்தெடுக்கவும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் இந்த வரைவு கொள்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செயல் திட்டத்தை வெற்றியடையச் செய்ய பிற நாடுகளில் நாய் தொல்லையை கட்டுப்படுத்த வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட நடைமுறைகளை தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top