நடுத்தர குடும்பம் கார் வாங்குவது நல்லதா?
நீங்கள் கார் வாங்கினால், தேவையில்லாத உறவினர்களின் வீட்டு நிகழ்வுகளுக்கு கூட செல்ல வேண்டி வரும். பேருந்து கட்டணம், மொய்ப் பணம் என்று இரண்டாயிரத்தில் முடிய வேண்டிய செலவு, கார் இருப்பதால் மொத்த குடும்பமும் அதில் ஏறிக் கொண்டால், பெட்ரோல், டோல்கேட், உணவு என்று மொத்தம் ஏழாயிரத்திற்கு மேல் செலவாகும்.
யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன். அதே போல கார் ஓடினாலும் சும்மா நின்றாலும் மாதம் ஒரு ஏழெட்டாயிரம் செலவு வைத்து விடும். அதுவும் வருடா வருடம் வாகன காப்பீடு வேறு எடுத்தாக வேண்டும்.
உங்கள் நெருங்கிய உறவினர்கள் அதே ஊரில் இருந்து அவர்களிடம் கார் இல்லையென்றால் உங்கள் நிலைமை அதோ கதி தான்.. அவர்கள் கேட்டால் கொடுக்காமல் இருக்க முடியாது. கொடுத்தால் கார் கண்டமாகி விடும். கொடுக்கவில்லையென்றாலோ உறவு கெட்டு விடும்.
உங்கள் மனைவி வீட்டு நிகழ்ச்சிக்கு காரில் சென்றால் பிறகு உங்கள் பெற்றோர் அவர்களுடைய தூரத்து உறவினர் வீட்டு விஷேஷ நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டுமென்பார்கள். நீங்கள் மறுத்தால், பிறகு உங்கள் மனைவியின் ஊர் பெயரை சொல்லி “ஹ்ம்ம்.. அந்த ஊருக்கு மட்டும் தான் கார் போகும் போல..” என்று உங்கள் காதுபட அங்கலாய்ப்பார்கள்.
பெயருக்கு தான் Free service.. அதிலேயே குறைந்தது நாலாயிரம் முதல் ஏழாயிரம் வரை பிடுங்கி விடுவார்கள். இரண்டு வருடங்களுக்கு பிறகு உங்களுடைய காரில் இல்லாத பாகங்களுக்கு சர்வீஸ் என்று சொல்லி பணம் பிடுங்குவார்கள்.
உங்கள் பிள்ளைகளும் அவர்கள் நண்பர்களை குறிப்பிட்டு அவர்கள் விடுமுறைக்கு அங்கே சென்று வந்தார்கள், இங்கே சென்று வந்தார்கள் என்று சொல்லி, உங்கள் சேமிப்புக்கு உலை வைப்பார்கள்.
அப்படி வாங்கியே ஆக வேண்டுமென்றால் குறைந்தது உங்கள் வீட்டில் பாதுகாப்பான பார்க்கிங் வசதி இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும். இல்லையென்றால் தெருவில் காரை நிறுத்திவிட்டு இரவு முழுவதும் உறங்காமல் அதை காவல் காக்க வேண்டியிருக்கும்.
பொதுவாகவே நடுத்தர குடும்பத்தினரில் கார் வாங்கி அவஸ்தைப்படுபவர்கள் தான் அதிகம். எனவே ஒரு முறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுங்கள்