தமிழ்நாட்டில் புத்தாண்டு வரை மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது :
நேற்று(25ம் தேதி) தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர – வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று (26ம் தேதி) அதிகாலை வரை அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்து காலை 8.30 மணி அளவில் மேலும் வலுவிழந்தது.
இதனால் இன்றும், நாளையும் (27ம் தேதி ) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் (28ம் தேதி ) முதல் அடுத்த 3 மூன்று நாட்களுக்கு (30ம் தேதி) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். அதிகாலை நேரங்களில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் ஏற்படலாம்.
அதேபோல், இந்த ஆண்டின் கடைசி நாளான 31ம் தேதியும், புத்தாண்டுஅன்றும் தமிழ்நாட்டில் ஒருசில பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.
சென்னைக்கு மழை உண்டா..?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை நெருங்கியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23முதல் 24 டிகிரி செல்சியசாகவும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
வடதமிழக கடலோரப்பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே அதன் வேகம் அதிகரித்து 55 கி.மீ வேகம் வரை வீசக்கூடும்.
அதேநேரத்தில் வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் அதன் வேகம் அதிகரித்து இடையிடையே 65 கி.மீ வேகம் வரை வீசக்கூடும். தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே அதன் வேகம் அதிகரித்து 55 கி.மீ வேகம் வரை வீசக்கூடும்.
அதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்லக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.