Close
டிசம்பர் 27, 2024 1:29 காலை

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பள்ளியை மூடுவதற்கு எதிர்ப்பு : மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..!

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மெட்ரிக் பள்ளியை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆலை முன்பு, பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்:

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மெட்ரிக் பள்ளியை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆலை முன்பு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் உள்ள, கூட்டுறவு சர்க்கரை ஆலை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 1978 ல் துவங்கப்பட்டது. சர்க்கரை ஆலை வளாகத்தில் செயல்படும் இந்த பள்ளி, விவசாயிகளின் குழந்தைகள், குறைந்த செலவில், ஆங்கில வழியில் கல்வி பயில வேண்டும் என்பதற்காக துவங்கப்பட்டது.

எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை செயல்பட்டு வந்த இப்பள்ளியில், நாமக்கல் மாவட்டம் தவிர்த்து, வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் அதிக அளவில் படித்து வந்தனர். இங்கு படித்த பலர் ஐ.ஏ.எஸ்., இன்ஜினியர், டாக்டர்கள் என, அரசு மற்றும் தனியார் துறைகளில் உயர்ந்த பதவியில் பணியாற்றி வருகின்றனர்.

மேலும், அரசு பொதுத்தேர்வில், 100க்கு, 100 சதவீதம் தேர்ச்சி பெற்று இப்பள்ளி சாதனை படைத்துள்ளது. தற்போது, எல்.கே.ஜி., முதல், 10ம் வகுப்பு வரை உள்ள மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில், 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அதில், ஆசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் என, 25க்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர்.

இந்நிலையில், கடந்த, 19ம் தேதி, பள்ளி மாணவ, மாணவியரின் பெற்றோர்களை அழைத்த ஆலை நிர்வாகம், தமிழக அரசு பள்ளியை மூடுவதாக அறிவித்துள்ளது. அதனால், உங்கள் குழந்தைகளை, ஜனவரி முதல், வேறு பள்ளியில் சேர்த்துவிடுங்கள் என தெரிவிக்கப்பட்டது.

அதைக் கேட்ட பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு இன்று விவசாயிகள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் பள்ளியில் படித்து வரும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளியை மூடும் திட்டத்தை கைவிடக்கோரி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாய முன்னேற்ற கழக நிறுவன தலைவர் செல்ல ராஜாமணி, பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியம், விவசாயிகள் சங்க தலைவர் வாசு சீனிவாசன் உள்ளிட்ட திரளான பிரமுகர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து விவசாயிகள், பெற்றோர்கள், மாணவர்கள் சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனர் மல்லிகாவை நேரில் சந்தித்து பள்ளியை மூடக்கூடாது தொடர்ந்து நடத்த வேண்டும் என மனு அளித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top