என் வழி தனி வழி என்று எண்ணி, அண்ணா பல்கலையின் வளாகம் முழுவதும் அத்துப்படியாக அறிந்து வைத்துக்கொண்டு அத்துமீறல் செயல்களில் ஈடுபட்ட ஞானசேகரன் இன்று மாட்டிக்கொண்டுள்ளார். பலநாள் திருடன் ஒருநாள் சிக்கியே தீருவான் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம். இதில் எத்தனை மாணவிகள் அந்த ஞானசேகரனால் பாதிக்கப்பட்டார்களோ நமக்குத் தெரியாது.
ஆனால் அவர் கணக்கு இப்போது சட்டத்தின் பிடிக்குள் வந்துவிட்டது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவரும், மாணவியும் நேற்று முன்தினம் பல்கலைக்கழக வளாகத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது, அங்கு அடையாளம் தெரியாத 2 பேர் வந்து மாணவனை தாக்கி துரத்திவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த மாணவி புகாருக்குப் பின்னர் வெளியுலகுக்குத் தெரியவந்தது.
தமிழ்நாட்டில் இப்படி ஒரு சம்பவமா என்று பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள இந்த சம்பவத்தில் பிரியாணி வியாபாரம் செய்யும் ஞானசேகரன் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பின்புறம் உள்ள கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர் இந்த ஞானசேகரன். அவருக்கு வயது 37. சிறு வயதில் இருந்தே அண்ணா பல்கலைக்கழகத்தை ஒட்டியுள்ள கோட்டூர்புரம் பகுதியில் வளர்ந்ததால், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சந்து பொந்துகள் அத்தனையும் ஞானசேகரன் அறிவார்.
பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்கு 7 முக்கிய வழிகள் இருக்கிறது. அவைகள் முறையான வழிகள். ஆனால் அந்த வழிகளை தவிர்த்து எந்த இடத்தில் நுழைந்தால் யாருக்கும் தெரியாமல் நுழையலாம் என்பது ஞானசேகரன் கற்றுவைத்துக்கொண்ட ரகசியம். சுற்றுச்சுவர் மீது ஏறிக் குதித்து உள்ளே செல்ல முடியும் என்பதையும் ஞானசேகரன் நன்கு அறிந்து வைத்துள்ளதாகவும் தெரிகிறது. குறிப்பாக அவரது அத்துமீறல் செயல்களை அரங்கேற்றுவதற்காகவே பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய ஞானசேகரன் தேர்வு செய்த இடம் சூர்யா நகர பகுதி.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு பின்புறம் கூவம் நதியை ஒட்டி அமைந்துள்ள இந்த சூர்யா நகர் பகுதியில், போதிய வெளிச்சமும் இருக்காது. ஆள்நடமாட்டமும் இருக்காது. அதனால் ஞானசேகரன் எந்த தடங்கலும் இல்லாமல் சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்று வருவாராம். இப்படி உள்ளே செல்லும் போது, தனியாக இருக்கும் மாணவிகளிடம் தான் காவலர் என்று கூறி ஞானசேகரன் பலமுறை அத்துமீறலில் ஈடுபட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் ஆண் நண்பருடன் இருக்கும் மாணவிகளை வீடியோ எடுத்து, அதை சமூக வலைதளத்தில் பரப்புவேன் என்று மிரட்டி, பாலியல் ரீதியாக அத்துமீறுவது அவரது ஸ்டைலாம். இவைகள் எல்லாம் இப்போது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதே பாணியில் நேற்று முன்தினமும் வன்கொடுமையில் ஈடுபட்ட ஞானசேகரனுக்கு எதிராக தைரியமாக மாணவி அளித்த புகார் ஞானசேகரன் வசமாக காவல்துறையிடம் சிக்கிக்கொள்ள காரணமாகிவிட்டது.
இந்த ஞானசேகரன் குறித்த குற்றப் பின்னணியில் பகீர் தகவல்கள் வெளிவந்துள்ளன.
கோட்டூர்புரம், மயிலாப்பூர், வேளச்சேரி, மந்தைவெளி போன்ற காவல் நிலையங்களில் ஞானசேகரன் மீது 15க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் இருப்பதால் 2013ம் ஆண்டில் இருந்து சரித்திரப் பதிவேட்டில் சேர்க்கப்பட்டு காவல்துறையின் தொடர் கண்காணிப்பு வளையத்தில் இருந்துள்ளார்.
அடையாறு, காந்திநகர் பகுதியில் சாலையோரத்தில் பிரியாணி விற்பனை செய்துவந்த ஞானசேகரன், தினந்தோறும் பிரியாணிக் கடை விற்பனைக்குப்பின்னர் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்று அங்கு மாணவிகளிடம் தனது ஹீரோயிச அத்துமீறல் செய்வதை வழக்கமாக வைத்திருந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோல அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இவரை கோட்டூர்புரம் போலீசாரால் கைது செய்த தகவலும் வெளியாகியுள்ளது.
விசாரணை வளையத்தில் உள்ள ஞானசேகரனின் செல்போனில் பல வீடியோக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவைகளை எல்லாம் கைப்பற்றியுள்ள காவல்துறையினர் ஞானசேகரன் இதுபோல வேறு மாணவிகளிடமும் வன்கொடுமை செயலில் ஈடுபட்டுள்ளாரா என்றும் விசாரணை செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே இன்று மாணவியை வன்கொடுமை செய்த குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று SFI மற்றும் AIDWA உறுப்பினர்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெளியே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்