நமது உடல் என்பது நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற பஞ்சபூதங்கள் அடங்கியது ஆகும். மனித உடல் என்பது வெறும் உறுப்புகள் அடங்கியவை மட்டுமல்ல. பஞ்சபூதங்கள் அடங்கியது இந்த உடல் என்பதை நமது ஆன்மீகம் மட்டுமல்லாமல் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளும் அதை மிகத்தெளிவாக வரையறுத்துக்கூறியுள்ளன.
இவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ள ஐம்பூதங்கள் எனப்படும் இந்த ஐந்து நிலைகளும் சமச்சீராக இருந்தால் மட்டுமே ஒருவரது உடல் ஆரோக்கியமானதாக இருக்கும். அவற்றில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் உடலில் நோய்த்தாக்கம் ஏற்படும். அவ்வாறு உடலில் ஏற்படும் நோய்களை அல்லது உடலில் ஏற்படும் பிரச்னைகளைத் தடுக்கவும் யோகா, சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவமுறைகள் சமநிலைப்படுத்த உதவுகின்றன.
யோகப் பயிற்சிகளைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் ஐந்து நிலைகளையும் கட்டுப்படுத்தி சமநிலையில் வைத்துக்கொள்ள முடியும் என்று சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவங்கள் பரிந்துரைக்கின்றன.
குறிப்பாக யோக முத்திரை பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் உறுப்பு செயல்பாடுகள் தூண்டப்படுகின்றன என்கிறார்கள் யோகக் கலை நிபுணர்கள். நவீன அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நவீன மருத்துவர்களும் இதை ஒப்புக் கொள்கிறார்கள். அதனால்தான் மனதை ரிலாக்ஸ்சாக வைத்துக்கொள்ள இன்று பெரிய அளவில் யோகப்பயிற்சியை மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
ஐம்பூதங்களின் சமநிலைக்கு உடலில் நோய் ஏற்படாமல் தற்காத்துக்கொள்ளவும் தினமும் யோகாவும், முத்திரைகளும் செய்யுங்கள். அதை முறையாக கற்றுக்கொள்ள யோகா பயிற்சியில் கை தேர்ந்த நிபுணர்களிடம் பயிற்சி எடுங்கள்.