காரிய பட்டி :
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, செவல்பட்டி அருள்மிகு வேணுகோபால் பெருமாள் கோயில் வளாகத்தில் ஐயப்பன் சுவாமி சிறப்பு பூஜை மற்றும் பஜனை நடை பெற்றது.
இதை முன்னிட்டு, ஐயப்பனுக்கு லட்சார்ச்சனை, கலபம் அபிஷேகம், கலச அபிஷேகம் சொர்ணாபிஷேகம், அரிசி மாவு, மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், சந்தனம், நெய், விபூதி உட்பட பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு ராஜஅலங்காரத்தில் காட்சியளித்த சொர்ண ஐயப்பனுக்கு, லட்ச தீபாராதனை மற்றும் மஹா தீபாராதனை காட்டப்பட்டது. ஐயப்ப பக்தர்கள் மேளதாளம் முழங்க ஐயப்பனின் பக்திப்பாடல்களைப் பாடி பரவசமடைந்தனர்.
ஐயப்பனுக்கு, மாலை அணிந்து விரதம் உள்ள பக்தர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் அனைவரும் திரளாக மண்டலபூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மண்டல பூஜையின் நிறைவாக, பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.