Close
ஏப்ரல் 2, 2025 9:08 காலை

பாமக சிறப்பு பொதுக்குழு மேடையில் தந்தைக்கும் மகனுக்கும் கருத்து முரண்பாடு..!

பாமகவின் பொதுக்குழு கூட்டம்

புதுச்சேரியில் நடந்த பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது.

புதுச்சேரியில் பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது ராமதாஸ் மகள் வழிப் பேரனான முகுந்தன் பரசுராமனை கட்சியின் இளைஞரணி தலைவராக நியமித்து அறிவிப்பு வெளியிட்டார். இதை ராமதாஸின் மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணி ஏற்க மறுத்தார்.

‘கட்சியில் சேர்ந்தே 4 மாதங்கள்தான் ஆகி இருக்கு. இப்போது இளைஞரணி தலைவர் பொறுப்பு கொடுக்கவேண்டாம். அவருக்கு என்ன அனுபவம் இருந்துவிடப்போகிறது. அவர் களத்தில் இருந்து என்ன வேலை செய்ய்யப்போகிறார்?’ என்று அன்புமணி முகுந்தன் நியமனத்துக்கு மறுப்பு தெரிவித்தார்.

அப்போது கோபமான ராமதாஸ், ‘நான் சொல்வதைத் தான் யாராக இருந்தாலும் கேட்க வேண்டும். இது நான் உருவாக்கிய கட்சி. என் பேச்சைக் கேட்காதவர்கள் விருப்பம் இல்லைன்னா கட்சியில் இருந்து வெளியேறலாம். கட்சியை விட்டு போவதாக இருந்தால் போகலாம்.” என்று குரலை உயர்த்திக் கூறினார்.

மீண்டும் முகுந்தன் நியமனத்திற்கு அறிவித்துவிட்டு தொண்டர்களை நோக்கி கைத்தட்டுங்கள் என்றார். ஆனால் கைதட்டல்கள் பலமாக எழவில்லை.

இந்த நியமன அறிவிப்புக்கு மத்தியில் ‘நீங்கள் சொல்லுங்கள். பண்ணுங்கள்’ என்று அன்புமணி ஒற்றையாக பதில் அளித்தார். இதனால் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே தந்தை ராமதாஸ் பேச்சில் அதிருப்தி அடைந்த அன்புமணி, ‘பனையூரில் எனக்கு தனியாக அலுவலகம் திறந்து இருக்கிறேன். என்னை யாரும் வந்து சந்திப்பதாக இருந்தால் அங்கு வந்து சந்திக்கலாம்’ என்று அறிவித்தார். மேடையில் சிலர் போன் நம்பரைக் கேட்க, போன் நம்பரையும் கொடுத்தார்.

தந்தை மகனுக்கு இடையே நடந்த பிரச்னை தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

இந்த சிறப்பு பொதுக்குழுவில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழக அரசு 3 முறை உயர்த்திய மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும்.

டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top