காஞ்சிபுரம் அடுத்த மாகரல் செய்யாற்றில் குளிக்கச் சென்ற மூதாட்டி மற்றும் அவரது பேரன் பேத்தி ஆகிய மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஒருவர் மீட்க பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம், மாகரல் அடுத்த செய்யாற்றில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக செய்யாற்றில் தடுப்பணையைத் தாண்டி நீர் சென்று கொண்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து நீர்வரத்து அதிகாரத்துக்கு காரணமாகவும் கடந்த 30 நாட்களாக தடுப்பணையை தாண்டி நீர் பாலாற்றுக்கு சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கடம்பர் கோயில் பகுதியைச் சேர்ந்த மனோகரன் என்பவரது மனைவி பத்மா சென்னையில் இருந்து விடுமுறைக்கு வந்துள்ள தனது பேரன் தீபக் மற்றும் வினிஷா ஆகியோருடன் அருகில் இருந்த செய்யாற்றில் 11 மணிக்கு குளிக்க சென்றுள்ளார்.
இவருடன் இவரது மருமகன் வினோத்தும் சென்றுள்ளார். நீரில் குளித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென ஆழம் மிகுந்த பகுதிக்கு பத்மா, தீபக் வினிஷா ஆகியோர் சென்ற நிலையில் நீரில் மூழ்கியுள்ளனர்.
இதனைக் கண்ட வினோத் அவர்களைக் காப்பாற்ற முயன்றும் காப்பாற்ற முடியாத நிலையில் கூச்சலிட்டதை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக வினோத்தை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, உத்திரமேரூர் தீயணைப்பு நிலையம் மற்றும் மாகரல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உத்திரமேரூர் தீயணைப்பு துறையினர் ஏழு பேர் கொண்ட குழுவினர் உடனடியாக ஆற்றில் பாதாள கொலுசு, பாதுகாப்பு சாதனங்களுடன் நீரில் மூழ்கி ஒவ்வொருவர் சடலமாக மீட்டனர்.
ஒரே நேரத்தில் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த செய்தி அறிந்த அப்பகுதி கிராம மக்கள் உடனடியாக அப்பகுதியில் குவிந்து கண்ணீர் விட்டு அழுதனர்.
நீரில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு மாகரல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விடுமுறைக்காக வந்த நிலையில் தனது ஒரே மகனை இழந்த தாயும், மகளை இழந்த தாயும் அதே நேரத்தில் தாயையும் இழந்ததால் அக்குடும்பமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.