கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது தமிழில் உள்ள சொலவடை. அந்த அளவுக்கு கடுகு ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
திரிகடுகம் எனப்படும் என்னும் மூன்று மருத்துவ பொருட்களான சுக்கு, மிளகு, திப்பிலி போன்ற பொருட்களுக்கு அடுத்தபடியாக இடம்பிடிப்பது கடுகுதான். அதனால் தான் எல்லா உணவுப்பொருட்களில் தாளிப்பிற்கு கடுகை சேர்க்கிறார்கள்.
கோடையில் உடலில் ஏற்படும் வேனல் கட்டிகளுக்கு கடுகை நன்றாக அரைத்துப் பூசவேண்டும்.கட்டி வரும்போதே அதன்மீது கடுகு அரைத்துப் பூசினால் அந்த கட்டி அப்படியே அமுங்கிப் போய்விடும். கட்டி பெரிதாக வந்தபின்னர் கடுகை அரைத்துப் பூசினால் இறுகி கட்டி உடைந்துவிடும். கட்டியில் இருக்கும் சீழ் முழுவதும் வெளியே வந்துவிட்டால் புண் மாறிவிடுகிறது.
கடுகில் உடலுக்கு அவசியமான எண்ணைச் சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியதாக இருக்கிறது. 100 கிராம் கடுகில் 508 கலோரி ஆற்றல் கிடைக்கிறது.
கடுகில் எளிதில் வளர்சிதை மாற்றம் அடையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. கடுகுக்கு கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் திறனும் உள்ளது. உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகில் உள்ளது. கடுகில் போலேட்ஸ், நியாசின், தயமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோ தெனிக் அமிலம் போன்ற பி- காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் உள்ளன.
இந்த பி- காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் உடலில் சுரக்கும் நொதிகளின் செயல்பாடு, நரம்பு மண்டல செயல்பாடு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில் பெரிதும் பங்கெடுக்கக் கூடியவையாகும். நியாசின் (வைட்டமின் பி-3) இரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ளும்.
கடுகில் கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாதுஉப்புகளும் உள்ளன. கால்சியம் சத்து எலும்பு உறுதியாவதற்கும், மாங்கனீஸ் நோய் எதிர்ப்பு பொருளாகவும், தாமிரம் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாவதற்கும், இரும்புச்சத்து செல்களின் வளர்சிதை மாற்றம் மற்றும் இரத்த அணுக்கள் உற்பத்தி செய்வதற்கும் முக்கிய பங்காற்றுகின்றன. அதனால் யாரும் கடுகை ஒதுக்க வேண்டாம். உணவில் தாராளமாகப் பயன்படுத்துங்கள்.