சோழவந்தான்:
சோழவந்தான், திருவேடகம், தென்கரை மேலக்கால் ஆகிய ஊர்களில் உள்ள சிவாலயங்களில் சனி பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த ஆண்டு கடைசி பிரதோஷமான சனி பிரதோஷம், வருகிற ஆண்டு முதல் பிரதோஷம் சனி பிரதோஷம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் கடைசி பிரதோஷமான நேற்று நடந்த சனி பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மார்கழி மாதம் என்பதால் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பிரளய நாத சுவாமி கோயிலில் நந்தி பெருமானுக்கு பால், தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பிரளய நாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ரிஷப வாகனத்தில் சுவாமியும் அம்பாலும் கோயில் வளாகத்தில்மூன்று முறை சுற்றி வந்தனர்.
இதில் சோழவந்தான் உட்பட அருகில் உள்ள கிராமத்தில் உள்ள சிவ பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. எம்விஎம் குடும்பத்தினர் சனிப்பிரதோஷ விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோயில் நந்திக்கு பால்,தயிர் உட்பட பதினோரு திரவியங்களால் அபிஷேகம் நடந்து. மூலவர்க்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் கோயிலைச் சுற்றி வலம் வந்தனர். இதில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சுவாமி கோயிலில் நடந்த சனிப்பிரதோஷ விழாவில் நந்தி பெருமானுக்கும் மூல நாதருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சுவாமியும் அம்பாளும் கோயிலை சுற்றி வலம் வந்தனர்.
சிறப்பு பூஜை நடைபெற்றது. மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பேட்டை அருணாசல ஈஸ்வரர் மேலக்கால் ஈஸ்வரன் கோயில் உட்பட இப்பகுதி சிவாலயங்களிலும் சனி பிரதோஷ விழா நடந்தது. சோழவந்தான், காடுபட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.