மதுரை.
தகைசால் பள்ளி 5 நாள் குளிர்கால உண்டு உறைவிட பயிற்சி முகாம் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சகள் மாணவ,மாணவிகளுடன் கலந்துரையாடினார்கள்.
மதுரை, லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லூரியில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பாக நடைபெற்ற தகைசால் பள்ளி 5 நாள் குளிர்கால உண்டு உறைவிட பயிற்சி முகாமில் , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர்
பங்கேற்று மாணவ,மாணவிகளுடன் கலந்துரையாடினார்கள்.
இந்நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:-
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 28 தகைசால் பள்ளிகள் (SCHOOL OF EXCELLENCE ) உருவாக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இப்பள்ளிகளில் பயிலும் 6, 7, 8, 9, மற்றும் 11 வகுப்பு சார்ந்த மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் , STEM, ரோபோடிக்ஸ் , இணையவழி பாதுகாப்பு மற்றும் தலைமைப் பண்பு போன்ற தலைப்புகளில் மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், தஞ்சாவூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் குளிர்கால உண்டு உறைவிட பயிற்சி முகாம் நடைபெற்று வருகின்றது.
மதுரை மாவட்டத்தில், இப்பயிற்சி முகாம் லதா மாதவன் தொழிநுட்பக் கல்லூரி வளாகத்தில் 26.12.2024 அன்று முதல் 30.12.2024 வரை வழங்கப்படுகிறது. இதில், 28 தகைசால் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு பயிலும் 140 மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் மற்றும் இணைய வழி பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்படுகிறது.
மேலும், மாணவர்கள் களப்பயணமாக கீழடி அருங்காட்சியகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம், திருமலை நாயக்கர் மகால் உட்பட பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சியின் இறுதி நாளன்று சான்றிதழ் வழங்கப்படும்.
குழந்தைகளை கல்வி அறிவு மட்டுமல்லாது பகுத்தறிவுடன் வளர்க்க வேண்டும். இது போன்ற முகாம்கள் நடத்துவதன் மூலம் குழந்தைகள் திரளான பிற மாணவர்களுடன் கலந்துரையாட வாய்ப்பாக அமைகிறது. அவர்களுக்கு சிந்தனை தெளிவு ஏற்படுவதோடு, தலைமை பண்பை வளர்த்துக் கொள்வதற்கும் இம்முகாம்கள் வாய்ப்பளிக்கின்றன என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசினார்.
மாணவர்களுடன், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் அ.வெங்கடேசன் , ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணை இயக்குநர் முனைவர் வை. குமார் , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.ரேணுகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.