Close
ஜனவரி 8, 2025 4:15 மணி

புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் : 98 கல்லூரிகள் 5509 மாணவிகளுக்கு கூடுதல் பயன்..!

கல்லூரி மாணவிகளுக்கு காசோலை வழங்கிய அமைச்சர் மூர்த்தி

மதுரை:

தமிழ்நாடு முதலமைச்சர்,  தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (30.12.2024) நடைபெற்ற விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்கள்.

இதனையடுத்து, மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்டத்தில் விரிவுபடுத்தப்பட்ட புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- உதவித்தொகை பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.

இவ்விழாவில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் மகளிர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பெண்கல்வியை ஊக்குவிப்பதற்கும், பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்று உயர்ந்திட வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அந்தவகையில் பெண்களின் உயர்கல்வி ஊக்குவித்திடும் நோக்கில் கடந்த செப்டம்பர் 2022-ல் புதுமைப்பெண் திட்டம் என்ற மகத்தான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மொத்தம் 92 கல்லூரிகளை சார்ந்த 7,340 மாணவியர்கள் மாதம் ரூ.1000 பெற்று பயனடைந்து வருகிறார்கள். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர்,

இத்திட்டத்தை அரசுப் பள்ளிகளில் படித்துள்ள மாணவியர்களுக்கு மட்டுமல்லாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கிடும் வகையில் விரிவுப்படுத்தி தொடங்கி வைத்துள்ளார்.

இதன் மூலம் மதுரை மாவட்டத்தில் 16 பொறியியல் கல்லூரிகள், 44 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 4 மருத்துவக் கல்லூரிகள், 2 தொழிற்பயிற்சி நிலையங்கள், 3 பாலிடெக்னிக் கல்லூரிகள், ஒரு சட்டக் கல்லூரி, ஒரு பல்கலைக்கழகம், 25 பார்மசி கல்லூரி மற்றும் 3 வேளாண்மைக் கல்லூரி உட்பட 98 கல்லூரிகளைச் சேர்ந்த 5509 மாணவிகள் கூடுதலாக பயன்பெற உள்ளார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர், தலைமையிலான இந்த அரசு எப்போதும் பெண்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட அரசாக செயல்பட்டு வருகிறது என, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ. வெங்கடேசன் , துணை மேயர் தி.நாகராஜன், மாநகராட்சி மண்டல தலைவர் சரவண புவனேஸ்வரி , சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணை இயக்குநர் ஜெயலெட்சுமி , கல்லூரி கல்விகள் இணை இயக்குநர் எ.குணசேகரன், மாவட்ட சமூக நல அலுவலர் கி.திலகம், டோக் பெருமாட்டி கல்வி முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top