சீரான குடிநீர் வழங்கக் கோரியும், குடிநீர் வழங்காத நகராட்சி அதிகாரிகளை கண்டித்தும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் நகராட்சியில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் தென்காசி நகராட்சி 33 வார்டுகளை கொண்ட பகுதியாகும். இங்குள்ள பல வார்டுகளில் சாலை, தெரு விளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை தேவைகள் முறையாக செய்து தரப்படவில்லை என குற்றசாட்டு எழுந்த நிலையில்,
இன்று 6 மற்றும் 15-வது வார்டு மலையான் தெரு பகுதியை சேர்ந்த, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நகர மன்ற உறுப்பினர்கள் சுமதி இசக்கிரவி மற்றும் சங்கரசுப்பிரமணியன் தலைமையில் சீரான குடிநீர் வழங்க கோரியும், குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்தும் காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகம் முன்பு அரிசி, அடுப்பு, தண்ணீருடன் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பகுதிகளில் சீரான குடிநீர் வழங்க வேண்டும் என பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் ஆய்வு என்கிற பெயரில் 15 நாட்களுக்கு ஒரு முறை அரை மணி நேரம் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக புகார் தெரிவித்தனர்.
மேலும் 4 தினங்களுக்கு ஒரு முறை, சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருநெல்வேலி நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் நேரில் வந்து இப்பகுதிகளை ஆய்வு செய்ய வேண்டும், அது வரை தங்களது போராட்டம் தொடரும் என்று கூறி அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலக வளாகத்திலேயே சமையல் செய்து போராட்டத்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து நகர்மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடனடியாக அந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு சீரான குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டதன் அடிப்படையில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.